மணிப்பூருக்கு வேறு மாநில டிஜிபியை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி

 

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தின் டிஜிபியை வெளியில் இருந்து நியமித்துக்கொள்வதற்கு மணிப்பூர் அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய டிஜிபி ராஜீவ் சிங் மே 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருக்கிறார். இந்நிலையில் மாநிலத்தில் நிலவும் அமைதியின்மையை கருத்தில் கொண்டு வெளிமாநிலத்தில் இருந்து ஒருவரை காவல்துறை தலைமை இயக்குனராக நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்ஜி, விபுல் எம். பன்சோலி ஆகியோரை கொண்ட அமர்வு, ‘‘மாநிலத்தில் நிலவும் தனித்துவமான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வெளியில் இருந்து ஒருவரை டிஜிபியாக நியமிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இந்த மனு அனுமதிக்கப்படுகின்றது. மணிப்பூருக்கு வெளியில் இருந்து ஒருவரை டிஜிபியாக நியமிப்பதற்கு மணிப்பூர் மாநில அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது” என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories: