தமிழ்நாட்டில் தவெக குதிரை பேரம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தேர்தல் ஆணையத்தில் அவசர கோரிக்கை மனு

 

புதுடெல்லி: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது போன்ற சூழலில் கடந்த 13ம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி அதிமுக எம்எல்ஏக்கள் 24 பேர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனை அடுத்து கட்சி தாவல் தடைச் சட்டம் அவர்கள் மீது பாயும் என்று இருந்த நிலையில் அந்த எம்.எல்.ஏ.க்களில் மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை எஸ்.ஜெயக்குமார், தாராபுரம் பி.சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேர் பதவியையும் , அதிமுக உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக இணைந்தனர். இந்த நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு அவசர கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதில், ‘‘தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி, மேற்கண்ட நால்வரும் தேர்தல் செலவுகளுக்காகத் தங்களது சொந்த நிதியிலிருந்து சுமார் தலா ரூ.40 லட்சம் வரை செலவிட்டுள்ளனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களாக தாங்கள் வகித்த பதவிகளிலிருந்து அவர்கள் விலகிய கணமே, அவர்களுக்கு தமிழக வெற்றி கழக கழகத்தின் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டைகள் உடனடியாக வழங்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் அரங்கேறிய நிகழ்வு என்பது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்பில், தமிழக வெற்றி கழக கட்சியானது ‘குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்பது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது.

எனவே மேற்கண்ட நான்கு உறுப்பினர்களும் தங்கள் சுயநலத்திற்காகவே பதவியை துறந்து கட்சியை மாற்றிக்கொண்டுள்ளனர்இது ஜனநாயக படுகொலையாகும், இவ்வாறு நான்கு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் விளைவாக, மேற்கூறிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடைத்தேர்தல் நடத்துவதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. மேலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த இந்த நபர்கள் மீண்டும் நடைபெறக்கூடிய இடை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே, இந்த ராஜினாமா விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் சி.பி.ஐ. தனது விசாரணையை நிறைவு செய்யும் வரை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கையை வெளியிடக்கூடாது. இந்த வி&யத்தில் குற்றமிழைத்தவர்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: