முறைகேடுகளை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்; ரேஷன் கடைகளை நவீனமாக்க ரூ.25,530 கோடி நிதி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

 

புதுடெல்லி: பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்குள் உணவு தானியங்களை கொண்டு செல்வதற்கும், நியாய விலைக்கடை விற்பனையாளர்களின் லாப வரம்புக்கும் தேவையான நிதி உதவி வழங்குதல் மற்றும் பொது விநியோக அமைப்பில் தொழில்நுட்பம் மூலம் நவீனமயமாக்கல் மற்றும் சீர்த்திருத்தங்களுக்கான ஸ்மார்ட் பிடிஎஸ் திட்டம் ஆகிய 2 தற்போதைய திட்டங்களை ஒருங்கிணைக்கும் சார்தக் பிடிஎஸ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

ரூ.25,530 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் சார்தக் பிடிஎஸ் திட்டத்தை மார்ச் 2031வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘இந்த திட்டம் ரேஷன் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் இருந்து உணவு தானியங்களை கொண்டு செல்வது, போக்குவரத்து தூரத்தை குறைப்பது வரை அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது.

சார்தக் பிடிஎஸ் திட்டமானது தற்போதுள்ள பொது விநியோக கட்டமைப்பிற்கு மாற்றாக அமையாது. மாறாக, உணவு தானிய விநியோகம், தளவாடங்கள், போக்குவரத்து, பொருள் கையாளுதல், குறைதீர்ப்பு ஆகியவற்றில் சீர்த்திருத்தத்தை கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேஷனில் தகுதியற்றவர்களை நீக்கி, சரியான பயனாளிகளைக் கண்டறிய ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் ’’ என்றார்.

வெப்ப அலையை சமாளிக்க நாடு தழுவிய அணுகுமுறை
தற்போது நிலவும் கடும் வெப்ப சூழலை எதிர்கொள்ள நாடு தழுவிய அணுகுமுறை தேவை என பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்ததாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘வெப்ப அலையிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து அமைச்சகங்களும் குறிப்பாக சுகாதாரம் மற்றும் நீர்வளத்துறைகள் போன்ற அமைச்சகங்கள் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். இத்தகைய பெரும் சவால்களை ஒன்றிய, மாநில அரசுகள், மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் நாடு தழுவிய அணுகுமுறை மூலமே எதிர்கொள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்’’ என்றார்.

Related Stories: