புதுடெல்லி: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து தமிழ்நாட்டில் முந்தைய திமுக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,‘‘போதுமான காரணங்களை விளக்காமல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என தெரிவித்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான முந்தைய திமுக அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டது.
மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேப்போன்று பல்வேறு மாநிலங்கள் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில்,‘‘தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்த தமிழ்நாடு அரசின் சட்டத்தை செல்லாது என்று அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற ஆணையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்தை ரத்து செய்தது தவறானது. குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றம் சரியான முறையில் ஆன்லைன் தடை சட்ட வழக்கைந கையாளவில்லை,அந்த விவகாரத்தை கையாண்டதில் பிழை செய்துள்ளது. மாநில அரசுக்கு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் உள்ளது. அது அவர்களுடைய கொள்கை சார்ந்த ஒன்றாகும். ஆன்லைன் சூதாட்டம் என்பது மக்களின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் நடந்துள்ளன. மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற சூதாட்ட விளையாட்டுகளை கட்டுப்படுத்துவதும் நெறிமுறைபடுத்தவும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து இயற்றிய சட்டம் செல்லும். தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை செல்லாது என்று அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற ஆணையை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் திமுக அரசு முன்னதாக கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டம் செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.
