தாதுமணல் ஆலை நிறுவனத்திடம் இருந்து மகள் கோடிக்கணக்கில் மாமூல்; பினராயி விஜயன், மருமகனின் வீடு உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: கேரளாவில் பரபரப்பு

 

திருவனந்தபுரம்: கொச்சி தாது மணல் ஆலை நிறுவனத்திடமிருந்து கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் கோடிக்கணக்கில் மாமூல் வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கண்ணூர் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீடுகள், மருமகனும், முன்னாள் அமைச்சருமான முகம்மது ரியாசின் வீடு உள்பட 12 இடங்களில் மத்திய அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் எக்சாலாஜிக் என்ற பெயரில் பெங்களூருவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இது தவிர வேறு சில நிறுவனங்களையும் இவர் நடத்தி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் கொச்சி தாது மணல் ஆலை நிறுவனத்தில் வருமானவரித்துறை திடீர் சோதனை நடத்தியது. அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஒரு ஆவணத்தில் வீணா விஜயனின் எக்சாலாஜிக் நிறுவனத்திற்கு வருடம் தோறும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தாது மணல் ஆலை நிறுவன நிர்வாக இயக்குனரான சசிதரன் கர்த்தாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எக்சாலாஜிக் நிறுவனம் தங்களுக்கு வழங்கிய சேவைக்காக பணம் கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆனால் எக்சாலாஜிக் நிறுவனம் எந்த சேவையும் வழங்கவில்லை என்று பின்னர் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக வீணா விஜயன் மீது தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ) வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையே வீணா விஜயன் தன்னுடைய எக்சாலாஜிக் நிறுவனத்தை மூடினார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வழக்கில் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் இதை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூரில் உள்ள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் வீடு, கோழிக்கோடு அருகே கோட்டூளி என்ற இடத்திலுள்ள வீணா விஜயனின் கணவரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான முகம்மது ரியாசின் வீடு, கொச்சி தாது மணல் ஆலை நிறுவன நிர்வாக இயக்குனரான சசிதரன் கர்த்தா மற்றும் இந்த நிறுவன அதிகாரிகளின் வீடுகள், பெங்களூருவில் உள்ள வீணா விஜயனின் நிறுவனம் உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

பினராயி விஜயன் கடந்த 10 வருடங்களாக வசித்து வந்த திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்து விட்டு சமீபத்தில் தான் திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினார். இந்த வீட்டில் தான் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த போது பினராயி விஜயன், மனைவி கமலா, மகள் வீணா விஜயன் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டது. கேரளாவில் அனைத்து இடங்களிலும் சுமார் 8 மணிநேரத்திற்கு மேல் சோதனை நடத்தப்பட்டது. இதில் அமலாக்கத்துறைக்கு சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

ராகுல் காந்திக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்: பினராயி விஜயன் கருத்து
அமலாக்கத்துறை சோதனை முடிந்த பின்னர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியது: என்னுடைய வீட்டில் நுழைந்து இப்படி ஒரு சோதனை நடத்தவேண்டும் என்பது அமலாக்கத்துறையின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. இந்த சோதனை ராகுல் காந்தி உள்பட சிலருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். அவர் கேரளத்திற்கு வரும்போதெல்லாம் பினராயி விஜயன் மீது ஒன்றிய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்பார். தங்களுடைய கட்சிக்காரர் அல்லாதவர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தட்டும் என்ற மனநிலையில் காங்கிரஸ் உள்ளது. இந்த சோதனையால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலவீனப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தாக்குதல் நடத்திய 7 பேர் கைது
அதிகாரிகள் சென்ற கார்களை தாக்கியவர்கள் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் கட்சி அலுவலகத்திற்குள் போலீசாரை நுழைய விட மாட்டோம் என்று சிபிஎம் தலைவர்கள் கூறினர். பின்னர் 7 பேரை போலீசார் அங்கிருந்து கைது செய்து கொண்டு சென்றனர்.

3 கார்களை சூறையாடிய தொண்டர்கள்: ஈடி அதிகாரி உட்பட இருவர் காயம்
திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீட்டில் சோதனை நடத்தப்படுவது குறித்து அறிந்தவுடன் வீட்டின் முன் காலையிலிருந்தே சிபிஎம் தலைவர்களும், தொண்டர்களும் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல பினராயி விஜயனின் வீடு இருந்த பகுதி முழுவதும் கட்டுக்கடங்காமல் தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் வீட்டின் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடங்கினர். சிபிஎம் மாநில செயலாளர் கோவிந்தன், வர்க்கலா எம்எல்ஏ ஜோய், முன்னாள் எம்எல்ஏ பிரசாந்த், முன்னாள் அமைச்சர் சிவன்குட்டி, முன்னாள் மேயர் ஆர்யா ராஜேந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென தொண்டர்கள் ஆவேசமடைந்து வீட்டின் வெளியே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசார் மீது பாட்டில், ஹெல்மெட் ‌மற்றும் கற்களை வீசினர். மேலும் தொண்டர்கள் கேட்டை தாண்டி உள்ளே நுழையவும் முயன்றனர். அவர்களை சிபிஎம் தலைவர்கள் உடனடியாக கட்டுப்படுத்தினர். பிற்பகல் 2.30 மணியளவில் சோதனை முடிந்து அதிகாரிகள் 3 கார்களில் வெளியே வந்தனர். அப்போது வெளியே திரண்டிருந்த சிபிஎம் தொண்டர்கள் கார்களை மறித்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

செங்கல், கட்டை மற்றும் தடியால் கார்களை தாக்கினர். இதில் 3 கார்களின் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் அமலாக்கத்துறை அதிகாரி டிக்சன் டேவிட் மற்றும் ஒரு காரின் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மிகவும் சிரமப்பட்டு அதிகாரிகளின் கார்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளும், ரிசர்வ் போலீசாரும் திருவனந்தபுரம் தம்பானூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்தனர். சேதமடைந்த கார்கள் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

Related Stories: