ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுக்கிறார்; சித்தராமையா இன்று பதவி விலகல்: புதிய முதல்வராகிறார் டி.கே.சிவகுமார்

 

பெங்களூரு: காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவை ஏற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று பதவி விலகுகிறார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து கடிதம் கொடுக்கிறார். அதை தொடர்ந்து புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்க இருக்கிறார். கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பாக விவாதம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி சென்ற முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சி மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோர் சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

இறுதியில் முதல்வர் சித்தராமையாவை பதவி விலகி, டி.கே.சிவகுமாருக்கு விட்டு கொடுக்கும் முடிவு எடுத்ததாக தெரியவருகிறது. கட்சி தலைமையின் முடிவை ஏற்று கொள்வதாக சித்தராமையா உறுதியளித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை முதல்வர் சித்தராமையா தான் ஏற்கனவே கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். பெங்களூரு விதானசவுதா வளாகத்தில், நேரு நினைவு தினத்தில் மட்டும் கலந்து கொண்டு, மலரஞ்சலி செலுத்தினார். பிறகு தனது அரசு இல்லமான காவிரியில் தங்கி இருந்தார். இதனிடையில் முதல்வர் சித்தராமையா அலுவலகத்தில் இருந்து ஆளுரின் மக்கள் பவனுக்கு கடிதம் அனுப்பி சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, பெங்களூரு காவிரி இல்லத்தில் உள்ள வீட்டில், இன்று காலை சிற்றுண்டி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் கலந்து கொள்ளும்படி துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் உள்பட அமைச்சர்கள், கட்சி சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.பிரேக் பாஸ்ட் மீட்டிங் முடிந்தபின், முதல்வர் சித்தராமையா செய்தியாளர் சந்திப்பு நடத்துவார் என்று தெரியவருகிறது.

இதனிடையில் ஆளுநரை சந்தித்து இன்று பதவி விலகல் கடிதம் கொடுத்த பின், இன்று பகல் 3 அல்லது 5 மணிக்கு கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜிவாலா மற்றும் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் சட்டமன்ற கட்சி தலைவராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்படுவார் என்றும். இன்று மாலை மக்கள் பவனுக்கு சென்று ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்படும் என்று தெரியவருகிறது. திட்டமிட்டபடி நடந்தால் நாளை அல்லது நாளை மறுநாள் டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது.

டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்து அதிகாரத்தை ஒப்படைப்பார் என்ற யூகங்களைத் தொடர்ந்து, பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் ராம்நகரில், தொண்டர்கள் டி.கே.சிவகுமாருக்கு வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை விநியோகித்தும் கொண்டாடினர்.

மேலிட தலைவர்களுடன் ஆலோசனை
சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதும், டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவதும் உறுதியாகிவிட்ட நிலையில், இன்று காலை சித்தராமையா நடத்தும் காலை உணவு விருந்தில் டி.கே.சிவகுமார் கலந்துகொள்கிறார். முன்னதாக நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகிய மூவரும் டி.கே.சிவகுமாருடன் தனியாக ஆலோசனை நடத்தினர். மாநில அரசியலில் அடுத்தகட்ட நகர்வு, அமைச்சரவை மாற்றம், காங்கிரஸ் கட்சியின் புதிய மாநிலத் தலைவர் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: