முதல்வர் ஹிமந்த பிஸ்வா மனைவி பாஸ்போர்ட் தொடர்பான வழக்கு காங். மூத்த தலைவர் பவன் கேரா அசாம் போலீஸ் முன் விசாரணைக்கு ஆஜர்

கவுகாத்தி: அசாம் முதல்வர் சர்மா மனைவி தொடர்ந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரான பவன் கேரா நேற்று அசாம் போலீசில் ஆஜரானார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரிங்கி சர்மாவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும், பல பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக ரிங்கி சர்மா அளித்த புகாரின்பேரில் பவன் கேராவுக்கு எதிராக அசாம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் பவன் கேராவின் முன்ஜாமீனை கவுகாத்தி நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி நிபந்தனை ஜாமீன் பெற்றார். இந்நிலையில் அசாம் காவல்துறையின் குற்றப்பிரிவு முன்பாக விசாரணைக்காக பவன் கேரா நேற்று நேரில் ஆஜரானார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரா, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். காவல்துறையினரால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் படியே இங்கு வந்துள்ளேன். நாங்கள் சட்டத்தையும், நீதித்துறையையும் மதிக்கிறோம். எனவே சட்ட நடைமுறைகளின்படி நான் இங்கு ஆஜராகி இருக்கிறேன்” என்றார்.

Related Stories: