எரிபொருள் சிக்கனத்தில் இரட்டை நிலைப்பாடு; பிரதமர் மோடியின் வேண்டுகோளை கண்டுகொள்ளாத பாஜக நிர்வாகிகள்: அணிவகுத்த கார்களால் மக்கள் கடும் அவதி

போபால்: பிரதமரின் எரிபொருள் சிக்கன வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினர் 200 கார்களில் அணிவகுப்பு நடத்தியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை காக்க வேண்டி, பிரதமர் மோடி கடந்த 10ம் தேதியன்று நாட்டு மக்களுக்கு ஏழு முக்கிய கோரிக்கைகளை விடுத்திருந்தார். ஓராண்டுக்கு தங்கம் வாங்க கூடாது, ஒர்க் பிரம் ஹோம் பணி, பொது போக்குவரத்து பயன்பாடு, எரிபொருள் சிக்கனம் போன்றவற்றை வலியுறுத்தினார்.

மோடியின் கோரிக்கையை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்திற்குள், கடந்த 11ம் தேதியன்று மத்தியப் பிரதேச பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சவுபாக்யா சிங் தாக்கூர், உஜ்ஜைனியில் இருந்து போபாலுக்கு பதவி ஏற்கச் சென்றார். இதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட சொகுசு கார்களில் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பால் உஜ்ஜைனி – போபால் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உச்சக்கட்ட வெயிலில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் என பல வாகனங்கள் பல மணி நேரம் சாலையில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, ‘ஒரு பக்கம் பொதுமக்களிடம் எரிபொருளை குறைக்கச் சொல்லும் பிரதமர், தனது கட்சி நிர்வாகிகள் ஆடம்பரத்திற்காக நூற்றுக்கணக்கான கார்களில் செல்வதை கண்டுகொள்வதில்லை; பாஜகவின் சிக்கன கோரிக்கை என்பது வெறும் பொதுமக்களுக்கு மட்டும்தானா?’ என்று கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கு பதிலளித்த மாநில பாஜக தலைவர் ஹேமந்த் கண்டேல்வால், ‘பிரதமரின் வேண்டுகோள் தெளிவானது என்றாலும், நடத்தையில் மாற்றம் என்பது மருந்து வேலை செய்வது போல மெதுவாகத்தான் மாறும்’ என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையே, மற்றொரு பாஜக தலைவர் சத்யேந்திர பூஷன் சிங், இ-ரிக்‌ஷாவில் அலுவலகம் வந்தாலும், அவருக்கு பின்னால் 40க்கும் மேற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் அணிவகுத்து வந்ததைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பொதுமக்கள் இந்தச் செயலை விமர்சித்து வருகின்றனர்.

Related Stories: