நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பாஜ இளைஞரணி நிர்வாகி, சகோதரனுடன் கைது: 5 பேரிடம் சிபிஐ கிடுக்கிபிடி விசாரணை நாடு முழுவதும் பல இடங்களில் சோதனை

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ராஜஸ்தானின் பாஜ இளைஞரணி செயலாளர் தினேஷ் பின்வால் அவரது சகோதரர் மன்கிலால் பின்வால் உட்பட 5 பேரை சிபிஐ கைது செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 22.79 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் இருந்து வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்வுக்கு முன்பாக மாணவர்கள் மத்தியில் பரப்பப்பட்ட 410 கேள்விகள் கொண்ட வினாத்தாளில் 120 கேள்விகள் நீட் தேர்வில் அப்படியே கேட்கப்பட்டிருந்ததை ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழு கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் அறிவித்து, மறுதேர்வு நடத்துவதற்கான நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், சிபிஐ வழக்கு பதிவு செய்து, வினாத்தாள் கசிவு தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த தினேஷ் பின்வால், மன்கிலால் பின்வால், விகாஸ் பின்வால் ஆகிய 3 பேரும், குருகிராமை சேர்ந்த யாஷ் யாதவ் மற்றும் நாசிக்கை சேர்ந்த சுபம் கைர்னார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதில் தினேஷ் பின்வால் பாஜ இளைஞரணி ஜெய்ப்பூர் மாவட்ட செயலாளர் என ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் இதை ராஜஸ்தான் மாநில பாஜ துணைத்தலைவர் முகேஷ் மறுத்துள்ளார்.

இளைஞரணியில் தினேஷ் பின்வாலுக்கு எந்த பொறுப்பும் தரப்படவில்லை என கூறி உள்ளார். ஆனால் தினேஷ் பின்வாலின் சமூக ஊடக கணக்குகளில் அவர் பல பாஜ தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களின் குடும்பத்தில் இருந்து 4 பேர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு தினேஷின் மகன் நீட் தேர்வு எழுதி உள்ளார். இதற்காக ராஜஸ்தானின் சிகாரில் உள்ள பயிற்சி மையத்தில் அவர் பயிற்சி பெற்றுள்ளார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

வினாத்தாள் கசிவு தொடர்பாக ராஜஸ்தான் காவல் துறையின் சிறப்பு நடவடிக்கை குழுவுக்கு கடந்த 7ம் தேதியே துப்பு கிடைத்துள்ளது. அவர்கள் 150 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து அதில் 20க்கும் மேற்பட்டோரை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளனர். ஆனாலும் ராஜஸ்தான் போலீசார் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை. இதற்கு காரணம் பாஜ நிர்வாகி சம்மந்தப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தை ராஜஸ்தான் போலீசார் மூடி மறைக்க முயன்றதாகவும் தற்போது உண்மை வெளிவந்து விட்டதாகவும் காங்கிரசின் அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார்.

எனவே இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் புயலை கிளப்பி உள்ளது. நாசிக்கை தொடர்ந்து புனேவில் பெண் ஒருவரை போலீசார் பிடித்து மேல் விசாரணைக்காக சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழுவுடன் இணைந்து செயல்படும் சிபிஐ, தற்போது கிடைத்துள்ள துப்புகளின் அடிப்படையில் நாடு முழுவதும் பல இடங்களில் நேற்று சோதனையும் மேற்கொண்டது.

பிடிப்பட்ட சந்தேக நபர்களின் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சிபிஐ கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளது. இதற்கிடையே, நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டின் முன்பாக தேசிய மாணவர் அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல, தேசிய தேர்வு முகமை தலைமையகம் முன்பாக ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

* நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எழுப்புவேன்
சமாஜ்வாடி எம்பி உர் ரஹ்மான் பர்க் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வரும் 21ம் தேதி தொடங்க உள்ள கல்வித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எழுப்புவேன். இது தேர்வுகளை நியாயாக நடத்துவதில் பாஜ அரசின் மிகப்பெரிய தோல்வியை காட்டுகிறது’’ என்றார்.

* கேரளாவில் இருந்து பரவிய வினாத்தாள்
நீட் வினாத்தாள் கசிவு விசாரணை, வாட்ஸ் அப்பில் மாணவர்கள் இடையே பரவிய வினாத்தாளை மையமாக கொண்டு நடந்து வருகிறது. இந்த மாதிரி வினாத்தாளில் இருந்த 120 கேள்விகள் நீட் தேர்வில் இடம் பெற்றிருந்தது. இது குறித்து ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழு ஐஜி அஜய் பால் லம்பா நேற்று அளித்த பேட்டியில், ‘‘கேரளாவில் எம்பிபிஎஸ் படிக்கும் ராஜஸ்தானின் சிகாரை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது நண்பர் ஒருவரிடமிருந்து இந்த மாதிரி வினாத்தாளை பெற்று சிகாரில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளார்.

சிகாரில் உள்ள ஒரு விடுதி உரிமையாளருக்கு இந்த மாதிரி வினாத்தாள் கிடைத்ததும் அதை விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும் அவருக்கு சந்தேகம் வரவே, உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஏராளமான மாணவர்களுக்கு இந்த மாதிரி வினாத்தாள் பகிரப்படுவதாக கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து விசாரணை நடந்துள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து வினாத்தாள் கசிவு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது’’ என்றார்.

* கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்
இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 10 ஆண்டில் 89 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. 48 முறை மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது. தேர்வுக்காக மாணவர்கள் கடினமாக உழைத்து தயாராகும் நிலையில், வினாத்தாள் கசிவால் அவர்கள் இந்த அமைப்பு மீது நம்பிக்கை இழக்கின்றனர்.

இந்த தோல்விக்கு பாஜ அரசு பொறுப்பேற்க வேண்டும். உலக போரை எல்லாம் மோடி நிறுத்துவதாக பாஜ கூறுகிறது. உண்மை என்னவென்றால், அவரால் வினாத்தாள் கசிவை கூட தடுக்க முடியாது என்பதுதான். இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

Related Stories: