திருவனந்தபுரம்: கேரளத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வருகிறது. புதிய முதல்வர் இன்று அறிவிக்கப்படுவார் என்று டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கூறினார். கேரளத்தில் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ஒரு சில நாட்களிலேயே முதல்வரை தேர்வு செய்து விடுவோம் என்று தேர்தலுக்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்.
ஆனால் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் அமோக வெற்றி பெற்று 10 நாட்கள் கடந்த பின்னரும் முதல்வரை தேர்வு செய்ய முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் கடும் சிக்கல் ஏற்பட்டது. முதல்வர் பதவிக்கு கடந்த பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசனுக்கும், மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரமேஷ் சென்னித்தலாவுக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்பியுமான கே.சி. வேணுகோபால் திடீரென இந்தப் போட்டியில் மூன்றாவது நபராக களத்தில் குதித்தார். இதன்பிறகு தான் முதல்வரை தேர்வு செய்வதில் கடும் குழப்பம் ஏற்படத் தொடங்கியது. ராகுல்காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட தேசிய தலைவர்களுக்கு இவர் மிக நெருக்கம் என்பதால் அந்த செல்வாக்கை பயன்படுத்தி வேணுகோபால் முதல்வர் பதவிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். தனக்குத் தான் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று இவர் கூறினார்.
ஆனாலும் சதீசனும், ரமேஷ் சென்னித்தலாவும் விட்டுக் கொடுக்காமல் போராடினர். இதனால் அவர்கள் 3 பேரையும் டெல்லிக்கு வரவழைத்து ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் இறுதி முடிவு எடுப்பதற்காக டெல்லியில் நேற்று மாலை மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு சென்ற ராகுல்காந்தி அவரிடம் ஆலோசனை நடத்தினார்.
சுமார் 1 மணிநேரத்திற்கும் மேல் நடந்த இந்த ஆலோசனையில் முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்பட்டது. பின்னர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் நிருபர்களை சந்தித்தார். அப்போது, கேரளத்தின் புதிய முதல்வர் நாளை (இன்று) அறிவிக்கப்படுவார் என்று கூறினார். இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களாக கேரளத்தில் நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* சதீசன் வீட்டின் முன் திரண்ட தொண்டர்கள்
வி.டி. சதீசன் தான் முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று கருதி எர்ணாகுளம் பரவூரில் உள்ள அவரது வீட்டின் முன் நேற்று காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல தொண்டர்கள் பெருமளவு குவிந்தனர். ஆனால் புதிய முதல்வர் அறிவிப்பு நாளை (இன்று) தான் வெளியாகும் என்று தகவல் வந்ததை தொடர்ந்து தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
