திருவனந்தபுரம்: மலையாள சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனில்குமார் உள்பட முதல் 6 பேருக்கு 20 வருடம் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப் உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையும் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய தீர்மானித்துள்ளார். விரைவில் அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் நீதிமன்ற செலவுகளுக்கு நடிகைக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலையாள சினிமா பெண் இயக்குனர் தீதி தாமோதரன், டப்பிங் கலைஞர் பாக்யலட்சுமி, முன்னாள் நக்சலைட் கே.அஜிதா உள்பட 8 பேர் சேர்ந்து ‘அவளுடன் சட்ட உதவி அறக்கட்டளை’ என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கியுள்ளனர். இந்த அறக்கட்டளைக்காக ஒரு கியூஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் உதவி செய்யலாம் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
