6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமானது தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி திடீர் உயர்வு: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: அத்தியாவசியமற்ற இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையே அதிகரித்த எண்ணெய் மற்றும் அந்திய செலாவணி கையிருப்புக்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்கும் வகையிலும், இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தும் நோக்கத்திலும் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்ப்பது மற்றும் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது ஆகியவற்றுடன் சேர்த்து தங்கம் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தங்கம், வெள்ளி இறக்குமதி வரியானது இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் நுகர்வில் இந்தியா உலகிலேயே 2வது இடத்தில் உள்ளது. ஆபரணத் தங்கம் நுகர்வு இந்தியாவில் தான் அதிகம். குழந்தை பிறப்பு தொடங்கி ஒவ்வொரு விழாவுக்கும் குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்பது இந்தியர்கள் பலரின் வழக்கமாக உள்ளது. மேலும், அவசரத் தேவைக்குப் பயன்படும் சிறந்த முதலீடாக கருதுவதும் இந்தியர்கள் தங்க நகைகள் வாங்குவதற்கு மற்றொரு காரணமாக அமைகிறது.

தங்கத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த சில மாதங்களாக அதன் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், போர் தீவிரம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு ரூ.95ஐ தாண்டி, ரூ.96ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதே நிலை தொடர்ந்தால் விரைவில் ரூ.100ஐ எட்டக்கூடும் என்ற அச்சமும் காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து தங்கம், வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் இவற்றின் மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு நேற்று உயர்த்தியுள்ளது. இதன்படி தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும், பிளாட்டினம் மீதான வரி 6.4 சதவீதத்தில் இருந்து 15.4 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இது நேற்று அமலுக்கு வந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி முந்தைய ஆண்டைவிட 26.7 சதவீதம் அதிகரித்து ரூ.9,84,000 கோடியானது. மொத்த இறக்குமதியில் இந்த இவற்றின் பங்கு 2024-25ம் நிதியாண்டில் 11.8 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகப்படியான இறக்குமதி வரிகள் காரணமாக உள்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவாக ரூ.95.80ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: