ஐதராபாத்: ஒன்றிய உள்துறை இணையமைச்சராக இருப்பவர் பண்டி சஞ்சய் குமார். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த இவரது மகன் பண்டி பகீரத். இவர் 17 வயது மாணவியுடன் பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்ததாக ஐதராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் ஒன்றிய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஐதராபாத்தில் உள்ள பெட் பஷீராபாத் காவல் நிலைய ஆய்வாளர் முன் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பகீரத் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் பகீரத் நேற்று ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பகீரத் தெலங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
