கவுகாத்தி: அசாமில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில், பழங்குடி மக்களுக்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் ஹிமந்தா சர்மா கூறினார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில், வரும் மே 21 முதல் 26 வரை அசாம் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும்.
அப்போது புதிதாகத் தேர்வான சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். கூட்டத்தின் இறுதி நாளில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது, பலதார மணம், வாரிசுரிமை மற்றும் சேர்ந்து வாழும் உறவுகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத ரீதியான நடைமுறைகள் இந்த மசோதாவின் வரம்பிற்குள் வராது. பழங்குடியின சமூகத்தினருக்கு முன்மொழியப்பட்ட சட்டத்தின் விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றார்.
