சமூக வலைதளம் மூலம் காதலிப்பதாக கூறி பழகி 180 சிறுமியரை சீரழித்த கொடூர இளைஞர் கைது: போலீசார் தீவிர விசாரணை; மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் சமூக வலைதளம் மூலம் காதலிப்பதாக கூறி பழகி, 180 சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டை மாநில அரசு நேற்று இடித்தது. மகாராஷ்டிரா மாநிலம் பரத்வாடா நகரை சேர்ந்தவர் முகமது அயாஸ் (எ) தன்வீர் (19). இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்கள், போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அவற்றை பார்த்து லைக் போடும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு காதல் தூது விட்டுள்ளார். அந்த இளைஞரின் வெளித்தோற்றத்தை பார்த்து அப்பாவி சிறுமிகள், குரூர முகத்தை அறியாமல் ஏற்று கொண்டுள்ளனர்.

அந்த வகையில், தனது மாய வலையில் விழுந்த சிறுமிகளை மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களிடம் நயவஞ்சமாக பேசி ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். அதிலும், சிலரிடம், அவர்களுக்கு தெரியாமலயே ரகசியமாக அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்துள்ளார். இதுபோன்று பல்வேறு சிறுமிகளிடம் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை செல்போனில் பதுக்கி வைத்துள்ளார். மேலும், அந்தரங்க வீடியோக்களை காட்டி அப்பாவி சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிலரை பாலியல் தொழிலில் தள்ளியதாகவும், சிலரை மதம் மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகள், தங்களது எதிர்காலத்தை கருதி புகார் கொடுக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த பாஜவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அனில் போண்டே, போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். இதில், முகமது அயாஸ், 180 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, 350க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி, முகமது அயாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

இதில், சிறுமிகளின் அந்தரங்க வீடியோக்களை நண்பர்களிடம் ஷேர் செய்தாரா? அல்லது குரூர எண்ணம் கொண்ட கும்பலுக்கு அனுப்பினாரா என்று விசாரித்து வருகின்றனர். அத்துடன் தனியாளாக ஈடுபட்டாரா அல்லது இதற்கு பின்னால் வேறு யாரேனும் உள்ளனரா எனவும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் இணையதளத்தில் பகிரப்பட்ட வீடியோக்களை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கைதான முகமது அயாஸ், அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் முன்னாள் நிர்வாகி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆயாஸின் வீடு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரிந்தது. அதனால் அந்த வீட்டின் படிக்கட்டுகள், ஜன்னல் கூரைகளை அப்பகுதி நகராட்சி ஊழியர்கள் புல்டோசர் மூலம் நேற்று இடித்தனர்.

Related Stories: