ஜனநாயகன் படம் நன்றாக இல்லாததால் நீங்களே இணையத்தில் கசிய விட்டீர்களா? நடிகர் சரத்குமார் கேள்வி

சென்னை: ஜனநாயகன் படம் நன்றாக இல்லை என்று நீங்களே இணையத்தில் கசியவிட்டு அனைவரும் பார்க்கட்டும் என்று விட்டுவிட்டீர்களா, என நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பினார். ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திராவுக்கு ஆதரவு கோரி ஆவடி மாநகராட்சியில் நடிகர் சரத்குமார் தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் பாஜ, அதிமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களின் எழுச்சி சிறப்பாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தவெக தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர். 41 பேர் இறந்துள்ளனர். அதற்கு நேரில் சென்று துக்கம் விசாரிக்காமல், வீட்டுக்கு அழைத்து அவர்களிடம் துக்கம் விசாரிக்கும் தலைவர் உலகில் யாரெனும் இருக்கிறார்களா? இது ஒரு உதாரணம் போதாதா.

இதை விட தவெகவைப்பற்றி என்ன பேசுவது? எதற்கெடுத்தாலும் அரசியல் பேசுகிறார். ஜனநாயகன் படத்தை உடன் இருப்பவர்களே ரிலீஸ் செய்வார்கள். இதுதான் அரசியலா? அதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தணிக்கை குழுவும் தான் காரணமா? நான் நடித்த ஜக்குபாய் படம் இணையத்தில் வெளியானது.

உங்களுடன் இருப்பவர்களே சதி செய்து படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ஒருவேளை ஜனநாயகன் படம் நன்றாக இல்லை என்று நீங்களே இணையத்தில் கசிய விட்டு, அனைவரும் பார்க்கட்டும் என்று விட்டு விட்டீர்களா என்பது யாருக்கு தெரியும். நடிப்பு என்பது அவரது தொழில். அவர் நடிப்பது, நடிக்காதது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: