‘எல்லாம் அவர் பாத்துப்பார்’ எடப்பாடியை கலாய்த்த அண்ணாமலை? பாஜ தேர்தல் அறிக்கை கேள்விக்கு கிண்டல் பதில்

சென்னை: தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜ வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்து சென்னையில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: மகளிருக்கான உதவித் தொகை ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குடும்ப தலைவிகளுக்கே வழங்கப்பட வேண்டும். இதே வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளதாகவும், சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொருந்துமா அல்லது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமா என்றும் கேட்கிறீர்கள். அதிமுக வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளபடி வழங்கப்படும்.

அதிமுக வெளியிட்டுள்ள வாக்குறுதிகளோடு ஒத்துப்போகும் வகையில் பாஜவின் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி இதை முடிவு செய்து அறிவிப்பார். இதில் தயக்கம் ஏதுமில்லை. சூழல் மற்றும் காலக்கெடுவைப் பொறுத்து எங்களது முதல்வர் வேட்பாளர் இதை உங்களுக்கு அறிவிப்பார்.  அதே நேரத்தில், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறது. எங்களது தேர்தல் அறிக்கையில் நாங்கள் என்ன செய்வோம் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.

வரும் காலங்களில் அனைத்தையும் அரசுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்வோம். எங்களது அரசு யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் அமையும். தமிழகத்தில் கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் நிச்சயம் வரும் என்பதை ஒன்றிய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஜே.பி.நட்டா ஆகியோர் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு இந்த உறுதியை அளித்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இதை நாங்கள் உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலையிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியபோது, பெரும்பாலான கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காமல் அதிமுக தேர்தல் அறிக்கையுடன் ஒத்துப்போகும் வகையில் பாஜ தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றும், கேள்விகள் அனதை்துக்கும், எங்கள் கூட்டணி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு அமைந்த உடன் நிறைவேற்றப்படும் என்று கூறியது எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்… என்ற சினிமா டயலாக் போன்று எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்வது போன்று அண்ணாமலையின் பேச்சு இருந்ததாக கமெண்ட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: