பகுதி நேர அடிப்படையில் பணியாற்றிய காலத்தை ஓய்வூதிய கணக்கீட்டில் சேர்க்க முடியாது: கிராம உதவியாளர் வழக்கில் ஐகோர்ட் முழு அமர்வு தீர்ப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்களாக பகுதி நேர அடிப்படையில் பணியாற்றி வந்தவர்களுக்கு 1995ம் ஆண்டு ஜூன் மாதம் பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2016ம் ஆண்டு ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் இளங்கோவன் என்பவர், தனது ஓய்வூதியத்தை கணக்கிடும் போது பகுதி நேர உதவியாளராக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள், வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால் இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எம்.தண்டபாணி, கே.குமரேஷ் பாபு ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய முழுஅமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்காலிக அடிப்படையில் பணியாற்றியவர்களின் பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்காக கணக்கில் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், பகுதி நேர அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு இந்த சலுகையை வழங்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

Related Stories: