சென்னை: ஜனநாயக விரோதமான தொகுதி மறுவரையறை செய்வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், தொகுதி மறுவரையறை செய்வதற்குமான திருத்த மசோதாக்களுக்கு மத்திய கேபினட் ஏப்ரல் 8ம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இந்த மசோதாவை சட்டமாக்க ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18ம்தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33% பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான ஆதரவு உள்ளது. ஆனால், பெண்கள் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையோடு கட்டாயமாக இணைக்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாடு, பெண்கள் உரிமையை ஒரு அரசியல் மூடுபனியாக பயன்படுத்தும் முயற்சி என்று குற்றம்சாட்டுகிறேன். இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் சூழலில் இத்தகைய அவசர நடவடிக்கை அரசியல் லாப நோக்கத்துடன் செய்யப்படுகிறது. பாஜ பெண்கள் இடஒதுக்கீட்டை ஒரு அரசியல் ஆதாயத்திற்காக முன்னெடுத்திருக்கிறது. தொகுதி மறுவரையறை கூட்டாட்சி சமநிலையை பாதிக்கக் கூடாது. அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது.
2026ம் ஆண்டு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகே தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்ட மாநிலங்கள் பிரதிநிதித்துவ இழப்பை சந்திக்காத வகையில் பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த உடன் அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தை நடத்தி, மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தில் இது முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.
பெண்கள் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையிலிருந்து பிரித்து உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அவசரமாக திணிக்க முயல்வது ஏற்க முடியாதது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
