சிவகங்கை: அதிமுக மாவட்ட செயலாளரும், தற்போதைய சிவகங்கை தொகுதி வேட்பாளருமான செந்தில்நாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளராக செந்தில்நாதன் உள்ளார். இவருக்கும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கும் கோஷ்டி மோதல் உள்ளது. பாஸ்கரன் சிவகங்கை தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு அமைச்சராக இருந்தவர்.
ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியுடன் உள்ள நெருக்கம் காரணமாக, சிவகங்கை தொகுதியை செந்தில்நாதன் கைப்பற்றி வெற்றி பெற்றார். தற்போதும் சிவகங்கை தொகுதியில் அவரே அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியில் சிவகங்கை தவிர மற்ற மூன்று தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்துவிட்டது.
இதனால் அதிமுக நிர்வாகிகள் செந்தில்நாதன் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் சிவகங்கை தொகுதி முழுவதும் செந்தில்நாதனை எதிர்த்து போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. ‘‘துரோகம் விரும்பாத சிவகங்கை சீமை என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், சிவகங்கை சீமையின் சபதம், மறைந்த முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம்,
முன்னாள் எம்எல்ஏ சோழன் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், சுப.கருப்பையா என அதிமுகவிற்கு உழைத்த அத்தனை பேரையும் வஞ்சகம் செய்தே வீழ்த்திய கருப்பு நரி, சிவகங்கையின் எட்டப்பன், 10.5 எடப்பாடியின் பணப்பெட்டி ஏஜெண்ட், சிண்டிகேட் செந்தில்நாதனை வீழ்த்துவோம்’’ என மிகவும் காட்டமாக கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் சிவகங்கை மாவட்ட அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
