மதுரை: அண்ணாமலையை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் ஒப்பிடுவதா என செல்லூர் ராஜூக்கு பார்வர்ட் பிளாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய பார்வர்ட் பிளாக் தினகரன் பிரிவு மாநில பொதுச்செயலாளர் எஸ்.தினகரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஒரு தேசிய தலைவர். ஒப்பற்ற சுதந்திர போராட்ட தியாகி. தன் வாழ்நாளில் பாதி நாட்களை சிறையில் கழித்தவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத்தலைவர்.
சுத்த பிரம்மச்சாரி. இப்படிப்பட்ட மகானை, மதுரையில் செல்லூர் ராஜூ, தனக்கு தேர்தல் பிரசாரம் செய்த பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை புகழ வேண்டும் என்பதற்காக, பசும்பொன் தேவரை, அண்ணாமலையுடன் ஒப்பிட்டு தேவரின் மறுபிறப்பு என்று பேசியுள்ளார். இதனை மிக வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் மதுரை மேற்கு தொகுதியில் எங்கு சென்றாலும் கருப்புக்கொடி காட்டுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
