தேர்தல் களத்தில் பாஜவை பற்றி தொண்டர்கள் பேச விஜய் தடை: வைரலாகும் ஆடியோ

சென்னை: திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் எ.வ.வேலு, பாஜ சார்பில் ஏழுமலை, தவெக சார்பில் அருள் ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி சார்பில் விக்னேஷ் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் தவெகவினர் இருவருக்கு இடையிலான உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த ஆடியோவில் பேசும் தவெக தொண்டர் ஒருவர், திருவண்ணாமலையில் பாஜவுக்கு ஓட்டுப் போடுவதற்கு பதிலாக தவெகவுக்கு ஓட்டுப் போட வலியுறுத்தியும் பாஜ செய்த தவறுகளையும் துண்டறிக்கையாக வழங்கினேன். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக நிர்வாகிகளே திட்டினார்கள் என்றும் தன்னை அடிக்க வந்ததாகவும் கூறியுள்ளார்.  எதிரில் பேசும் மற்றொரு தவெக நிர்வாகி, பாஜவுக்கும் நமக்கும் என்ன இருக்கிறது.

நமது முழு டார்கெட்டும் திமுக தான். அவர்களைத்தான் நாம் அடிக்க வேண்டும். நமது தலைமை சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டும். இப்போதைக்கு நாம் பாஜவை தொடக்கூடாது. சில விஷயங்கள் உனக்கு புரியாது; அது மேலிடத்து விவகாரம். காரணம் இல்லாமல் மேலிடத்தில் இருந்து சொல்ல மாட்டார்கள். நாளை பாஜவின் உதவி நமக்கு தேவை என நினைப்பார்கள். இன்னமும் ஒரு வாரம்தான் உள்ளது; நிறைய வேலைகள் உள்ளது.

பிரச்னை செய்யாமல் வேலையைப் பார். திமுகவை காலி செய்வதுதான் நமது வேலை; பாஜ பிரச்னை கிடையாது. தளபதியே இப்போது பாஜவைப் பற்றிப் பேசுவதை குறைத்துவிட்டதை கவனித்தாயா? என அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இதைச் சமூக வலைதளங்களில் பகிரும் நெட்டிசன்கள் தவெக தலைமை பாஜவுக்கு எதிராகக் களத்தில் பேசக்கூடாது எனவும் அவர்களுக்கு எதிராகச் செயல்படக்கூடாது எனவும் வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டுள்ளதா என்ற கேள்வியை முன்வைத்து வருகிறார்கள்.

Related Stories: