முதல்வர் மு.க.ஸ்டாலின் 6 ம் கட்ட பிரசாரம்: ஆண்டிப்பட்டியில் 17ம் தேதி தொடக்கம்

சென்னை: ஆறாம் கட்டமாக ஆண்டிப்பட்டியில் 17ம் தேதி திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இந்த தொடர் பிரசாரத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 31ம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், ஆறாம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 17ம் தேதி ஆண்டிப்பட்டியில் தொடங்குகிறார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறாம் கட்டமாக ஆண்டிப்பட்டியில் பரப்புரையை தொடங்குகிறார்.அதன்படி மாலை 5 மணிக்கு ஆண்டிபட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் சட்டமன்ற தொகுதிகள், மாலை 7 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதைப்போன்று வரும் 18ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருப்பூர் தெற்கு, வடக்கு, பல்லடம், அவினாசி, தாராபுரம், காங்கேயம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள், மாலை 7 மணிக்கு மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டத்தில் மேட்டுப்பாளையம், உதகமண்டலம், கூடலூர், குன்னூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் வரும் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஓசூர் பொதுக்கூட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், வேப்பனஹள்ளி, தளி சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். தலைவர் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரசாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கழகத் தோழர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாம் என கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக முன்னணியினர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தலைவர் தங்கும் இடத்திற்கு வருவதை தவிர்த்து, பிரசாரக் கூட்டத்திற்கு நேரடியாக வருகை தர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: