மதுரை: விஜய் மீதும் அவரது கட்சியினர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆதித்தமிழர் முன்னேற்றக்கழக மதுரை மாவட்ட செயலாளர் ஆதவன் தலைமையில் வந்திருந்த கட்சியினர் மதுரை போலீஸ் கமிஷனர் அபிசேக் தீட்சித்திடம், விஜய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு நேற்று அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது; சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரசாரத்திற்காக மதுரைக்கு விஜய் வந்தார். பாண்டிகோவில் வழியாக அங்குள்ள சுங்கச்சாவடி அருகே வாகனத்தில் சென்றார். அப்போது அங்கு ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்களும் நின்றிருந்தனர். பிரசார வாகனத்தில் இடது புற பக்கவாட்டில் ஒரு சிலர் ஏற முயன்றனர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த பவுன்சர்கள் பொதுமக்களையும், தொண்டர்களையும் பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளனர்.
இதை வேனில் அமர்ந்திருந்த விஜயும் கண்டுகொள்ளவில்லை. இது போல அவர் செல்லும் இடமெல்லாம் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே சட்டமன்றத்தேர்தலில் அவரது கட்சிக்கான தேர்தல் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் விஜய் மீதும் அவரது பவுன்சர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
