அதிமுக-பாஜ ஆட்சி ஏற்படவே திமுகவை விஜய் எதிர்க்கிறார்: திருமாவளவன் பேட்டி

சென்னை: திமுகவை எதிர்க்கும் விஜய், அதிமுக-பாஜ ஆட்சிக்கு வழிவகுக்கிறார் என திருமாவளவன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை விளக்க அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் வெளியிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தி திணிக்காத இருமொழிக் கொள்கை, கடலும் காடும் கனிமமும் நமதே, விலையில்லாத கல்வியைப் பெறுவோம், அடிப்படை உரிமையாய் மருத்துவத்தை ஆக்குவோம், மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு, மகளிருக்கு 50 விழுக்காடு, தனியார் துறையிலும் சமூக நீதி, உழுபவருக்கு நிலம்; இருப்பவருக்கு இடம், சிறுபான்மையினரைக் காக்க சிறப்புச் சட்டம், காவல் துறையும் சிறைத் துறையும் சீர்திருத்தப்பட வேண்டும், மது, போதைப்பொருட்களை ஒழிப்போம், ஆணவக்கொலைகளைத் தடுத்திட சிறப்புச் சட்டம் இயற்றிடச் செய்வோம்” என 12 கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கொள்கை அறிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியாகவோ அல்லது கோரிக்கையாகவோ இல்லாமல், கொள்கை அடிப்படையில் கொள்கையை வெளிப்படுத்தும் அறிக்கையாகவே விசிக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள அரசு இந்த நாட்டை 2000 ஆண்டு முன்பு இழுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ‘ஒரே தேசம் ஒரே கலாச்சாரம்’, ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற அடிப்படையில் அரசியலமைப்பின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில் பாஜ திட்டமிட்டுக் காய் நகர்த்தி வருகிறது. வரும் 16, 17, 18 தேதிகளில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை பாஜ நடத்துகிறது.

தேர்தல் நேரம் என்பதால் தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலங்கள் சார்ந்தவர்கள் பங்கேற்காத சூழல் உள்ளது. இது அத்துமீறல். இதை தேர்தலுக்குப் பின்னர் வைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படவில்லை, பாஜ கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தேர்தல் வரலாற்றில் இதுவரை தலைமைச் செயலாளரை மாற்றியது கிடையாது. இது பாசிச நடவடிக்கை ஆகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக மற்றும் அதிமுக என்ற இரு முனைப் போட்டிதான். குறிப்பாகத் தமிழக மக்களுக்கும் சங் பரிவார் அரசியலைப் பேசும் சக்திகளுக்கும் இடையே நடக்கும் யுத்தமாகப் பார்க்கிறோம். ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தும், விஜய் ‘திமுக அகற்றப்படும்’ என தெரிவித்துள்ளார். இதிலிருந்து அதிமுக-பாஜ ஆட்சியை அமர்த்துவதுதான் அவரது நோக்கமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: