சென்னையில் 3000 ஆட்டோக்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு சென்னையில் 3000 ஆட்டோக்களில் விழிப்புணர்வு விளம்பரம் வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி நேற்று தொடங்கியது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சிலம்பம், புலியாட்டம், பறை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், பேருந்து நிறுத்தங்களிலும் தேர்தல் குறித்த விளம்பரங்கள், வினாடி வினா, பேருந்துகளில் மாதிரி வாக்குச்சாவடி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பேருந்துகளின் பின்பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பரம் உள்ளிட்ட பல்வகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 3000 ஆட்டோக்களில் விழிப்புணர்வு விளம்பரம் வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நேற்று (14ம் தேதி) தொடங்கப்பட்டது. இதன் அடையாளமாக, யானைகவுனி பாலம் அருகிலுள்ள கண்ணப்பர் திடல் விளையாட்டு மைதானத்திலிருந்து “போடுவோம் ஓட்டு, வாங்க மாட்டோம் நோட்டு” தேர்தல் நாள்: 23 ஏப்ரல் 2026 என்ற வாசகங்கள் அடங்கிய வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆட்டோக்களின் பின்புறம் ஒட்டப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடங்கி மேற்கொள்ளப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இடது ஆட்காட்டி விரலை உயர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஆட்டோக்கள் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: