சென்னை: பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆசியாவை ஒட்டிய பிலிப்பைன்சுக்கு சற்று கிழக்குப் பகுதியில் ‘சின்லாகு புயல்’ உருவாகியுள்ளது. இது ஐந்தாம் வகை சூப்பர் புயல் (250-275கிமீ வேகம்) என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பசிபிக் கடலில் ஆசியா பக்கம் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் பக்கம் குளிர் அதிகமாக உள்ளது. இந்த குளிர் மற்றும் ஈரத்தை கடத்திக் கொண்டு வருகிறது என்றும், மத்திய பசிபிக் கடல் பகுதி வரையில் வெப்பத்தை உயர்த்தும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஜப்பான், தைவான், சீனா, பிலிப்பைன்ஸ் பகுதிகளில் கடந்த ஆண்டைவிட கோரமான புயல்கள் உருவாகும் என்று ஏற்கனவே உலகளாவிய நீண்டகால வானிலை கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப முதல் புயல் தற்போது பிலிப்பைன்ஸ் அருகே உருவாகியுள்ளது. இது ஐந்தாம் வகை சூப்பர் புயல் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் புயல் ஆசிய நாடுகளை தாக்காமல் விலகிச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பசிபிக் கடல் பகுதியில் உள்ள சிறிய தீவுகளை தாக்கிய படியே கடந்து செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் பசிபிக் கடல் பகுதியில் சூப்பர் எல்-நினோ உருவாக உள்ளது. அதனால், அமெரிக்கா பக்கம் அபரிமிதமான வெப்பம் அதிகரிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் ஆசியா பக்கமும் காற்று சுழற்சிகள் உருவாகி புயல்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது தென் அரைக்கோளத்தில் வெப்பம் உயர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக நீராவியை உருவாக்கும் காற்று சோமாலியா, ஏமன் வழியாக வந்து இந்தியாவுக்குள் நுழையும். அப்போது அதிக நீராவியை கொண்டு வரும் சாதகமான நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நீராவி குஜராத் வழியாக அரபிக் கடல் பகுதியில் இறங்கி தென்மேற்கு பருவமழைக்கு காரணமாக அமையும். இதுவரை இல்லாத வெப்பம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள அதே நேரத்தில், வங்கக் கடல் பகுதியிலும் உருவாகி தென்மேற்கு பருவக் காற்றை ஈர்க்கும். அதனால் சோமாலியா வழியாகவும், குமரிமுனை வழியாகவும் காற்றை இழுத்து கேரளாவில் தென் மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் வாய்ப்புள்ளது.
உலகஅளவில் வானிலை ஆய்வாளர்கள் கணிப்பின்படி இந்த ஆண்டு அதிக அளவில் வெப்பம் அதிகரித்து மழை பொய்க்கும் என்றும், அதன் காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் கவலையும் இருந்து வருகிறது. ஆனால் அரபிக் கடல், வங்கக் கடல் என இருபகுதியிலும் தற்போது வெப்பம் அதிகரித்துள்ளதால் பெரும்பாலான காற்று சுழற்சிகள் வங்கக் கடலில் உருவாகி மேற்கு நோக்கி பயணித்து மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி தென்மேற்கு பருவமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மே மாதம் அரபிக் கடலில் முதல் காற்று சுழற்சி உருவாக இருக்கிறது.
