பொதுநலன் கருதி 117 தற்காலிக உதவி மருத்துவர்களை பணி வரன்முறை செய்வதை மறுக்க கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொது நலனை கருதி, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 117 உதவி மருத்துவர்களை தற்காலிக அடிப்படையில் நியமித்த அரசு அவர்கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்படவில்லை என்று பணி வரன்முறை செய்ய மறுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025-26ம் ஆண்டுக்கான சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த அருள்வேல் என்ற மருத்துவர் அரசு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் 2021ம் ஆண்டு முதல் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் கொண்டு கலந்தாய்வுக்கு அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ தேர்வு வாரியம் நடத்திய சிறப்பு தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படாதவர்களை பணி வரன்முறை செய்ய முடியாது. பணி வரன்முறை செய்யப்படாதவர்களை அரசு மருத்துவர்களாக கருதி சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு அனுமதிக்க முடியாது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுநலனை கருத்தில் கொண்டு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தற்காலிக அடிப்படையில் நியமித்த 117 மருத்துவர்களின் பணியை வரன்முறை செய்து அரசு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும். பணியை வரன்முறை செய்ய முடியாது என்று மறுக்க முடியாது. தகுதித்தேர்வை பின்னாளில் எழுதிய அவர்களுக்கு பணிவரன்முறை பெற தகுதி உள்ளது. தற்காலிக அடிப்படையில் அவர்கள் பணியாற்றிய காலத்தை கணக்கில் கொண்டு சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்புக்கு பரிசீலித்து சேர்க்கை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: