கரூர், ஏப். 10: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய மனோகரா கார்னர் அருகே வாகன ஓட்டிகள் கோடையை சமாளிக்கும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக கரூர் மாவட்டம் முழுதும் தினமும் 100 டிகிரியை தாண்டியும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. கோடையை சமாளிக்கும் வகையில் பொதுமக்கள் பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றனர். கரூர் பழைய பேரூந்து நிலையம் அருகே மனோகரா கார்னர் சிக்னல் பகுதி உள்ளது.
இந்த பகுதியின் வழியாக கோவை, மதுரை, திண்டுக்கல், சேலம், ஈரோடு போன்ற அனைத்து பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் இ்நத மனோகரா கார்னர் வழியாக சென்று வருகிறது. தொடர்ந்து வாகன போக்குவரத்து காரணமாகவும், அதிகளவு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதாலும், கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் சிக்னல் அருகே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிறிது நேரம் சிக்னல் அருகே இளைப்பாறி தங்களின் பகுதியை நோக்கி முன்னேறிச் சென்று வருகின்றனர்.
