சென்னை: படித்த உள்ளூர் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ‘டியூஷன் அக்கா’ திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. ‘தமிழ்நாட்டை முன்னேற்றுவோம்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வெளியிட தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவர் கார்த்தி சிதம்பரம், கோபண்ணா உள்ளிட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு உறுப்பினர்கள் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், ராம் மோகன், மாநில துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், இதயத்துல்லா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 10 தலைப்புகளில் 50 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு: பள்ளிக்கு பிறகான தனிப்பயிற்சிக்கு படித்த உள்ளூர் பெண்களை பணியமர்த்தும் ‘டியூஷன் அக்கா’ திட்டம் நிறைவேற்றப்படும். இதில், கற்றல் இடைவெளிகளைக் கொண்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பார்வை, அடிப்படை கற்றல் தரவுகளை மேம்படுத்துதல், படித்த உள்ளூர் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகிய சிறப்பு அம்சங்கள் இடம்பெறும். குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் மாதம் ரூ.2,000 பணம் பெண்களின் வங்கி கணக்கிற்கு நேரடிப் பணப் பரிமாற்றம் செய்யப்படும்.
முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். பி.எம்.கிசான் திட்டத்தில் இருந்து விடுபட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். பொது வினியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் முதல் தர அரிசி மட்டுமே வழங்கப்படும். அனைத்து ரேஷன் கடைகளும் நல்ல வெளிச்சம் கிடைக்கும் வகையில் மிகவும் தூய்மையாக புதுப்பிக்கப்படும். குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு தரமான போட்டித் தேர்வு பயிற்சி வழங்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டணமின்றி தரமான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். மருத்துவ படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டை முழுமையாக 10 சதவீதமாக உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் ஏ.ஜ. தொழில்நுட்ப உதவியோடு கற்பிக்கப்படுவதுடன், ஆசிரியர்களுக்கு ஏ.ஐ. பயிற்சி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.
