வன்னியர் சமுதாய மக்களுக்கு எதுவுமே செய்யல… நோட்டுக்கும், சீட்டுக்கும் விலை போகும் அன்புமணி முகத்திரையை கிழிப்போம்; காடுவெட்டி குரு மகள் சபதம்

* எடப்பாடி பழனிசாமியின் டெபாசிட்டையும் காலி செய்வோம்
* தந்தை இருந்திருந்தால் ராமதாசை இப்படி விட்டு இருப்பாரா எனவும் கேள்வி

திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் மகள் குரு.விருதாம்பிகை மற்றும் அவரது கணவரும்-ஜெ.குருவின் மருமகனுமான காடுவெட்டி மனோஜ், பொருளாளர் ஆர்.பாலமுருகன், இணைச் செயலாளர் குடியாத்தம் பிரேம்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து, “ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி’’’ நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை அளித்த பேட்டி: 2019 தேர்தலில் இருந்தே நாங்கள் திமுகவுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கிறோம். எதனால் என்றால், மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து, அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய பங்கீடு கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதேபோன்று, இந்த வருடம் 27 எம்எல்ஏ சீட் வன்னியர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதேபோல, கலைஞர் ஆட்சியிலும் கூட அந்த 21 தியாகிகளுக்குமே 3 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

அவர்களுக்கு இப்போது வரைக்கும் ஓய்வூதியம் கொடுத்து வருகிறார்கள். இவையெல்லாம் கலைஞர் ஆட்சியிலேயே கொடுத்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினும் நம்முடைய 21 தியாகிகளுக்கும் சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு போராளி என்று எங்களுக்கான ஒரு அங்கீகாரத்தை கொடுத்து, விழுப்புரத்தில் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டி கொடுத்திருக்கிறார். அதிகபட்சமாக, திமுக ஆட்சி வன்னிய சமுதாய மக்களுக்கு நல்லது செய்திருக்கிறார்கள். அதனால், நாங்கள் திமுகவிற்கு ஆதரவு கொடுத்திருக்கிறோம்.

ஏனென்று சொன்னால், இந்த 21 தியாகிகளுக்கோ, இந்த வன்னியர் சமுதாய மக்களுக்கோ, அன்புமணி, எடப்பாடி எதுவும் செய்தது கிடையாது. 2021 தேர்தலில், தேர்தல் அறிக்கை கொடுப்பதற்கு முன்னால், 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்கப் போகிறேன் என்று சொன்னார். நான் என்ன கேட்கிறேன் என்றால், 10.5 சதவிகிதம் தருகிறேன் என்று நீங்கள் எதற்கு சொன்னீர்கள்? நாங்கள் 20 சதவிகிதம் வன்னியர் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கணக்கெடுப்பே எடுக்காமல் சரியான முறையில் கொடுக்காமல் நீங்கள் சொன்னதால் அது அமலுக்கு வராமல் போய்விட்டது. ஆனால், திருச்சி கூட்டத்தில் எடப்பாடி என்ன சொல்கிறார் என்றால், அதெல்லாம் முடிந்து போன விஷயம் என்று சொல்கிறார்.

அன்புமணி ராமதாஸ், ஒருபடி மேல சென்று என்ன செய்திருக்கிறார் என்றால், இந்த சமூக நலத்திற்காகத்தான் இந்த பாமக கட்சி உருவாக்கப்பட்டது. அவர் இப்போது வரைக்கும் என்னுடைய தந்தை மாவீரன் ஜெ.குருவுக்கு எப்படி சூழ்ச்சி செய்து துரோகம் செய்தாரோ, அதேபோல ராமதாஸ்க்கும் அவர் துரோகம் செய்கிறார். எங்கள் அப்பாவுக்கு துரோகம் செய்தார்கள், இப்போது அவர்களுடைய அப்பாவுக்கு துரோகம் செய்கிறார். ஐயாவின் நிலைமையை பார்த்தால் யாராலும் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அந்த கட்சியில், மாவீரன் காடுவெட்டியார் இருந்திருந்தால், இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கவே ஏற்பட்டிருக்காது.

அன்புமணி காசுக்காகவும், சீட்டுக்காகவும் தான் ஒவ்வொரு கட்சிக்கும் விலை போகிறார். இந்த தேர்தலில், அன்புமணியின் முகத்திரையை கிழிப்பதுதான் எங்களின் முக்கியமான ஒரே நோக்கமாக இருக்கும். நாங்கள் கிராமம் கிராமமாக சென்று, ஊர் ஊராக சென்று எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்து, எங்களுடைய தந்தைக்கு என்ன அநீதி நடந்ததோ, அதே போன்று அவர்களுடைய தந்தை ராமதாஸ்க்கும் அநீதி நடக்கிறது. இவை எல்லாவற்றையும் நாங்கள் போய் சொல்லுவோம். கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து, அன்புமணியின் முகத்திரையை கிழிக்கிறது தான் எங்களுடைய ஒரே நோக்கமாக இருக்கும்.

ஏனென்றால், இப்போது வரைக்கும், இந்த சமுதாயத்தை ஏமாற்றிவிட்டார்கள். இதற்குப் பிறகு, இந்த சமுதாயத்தை ஏமாற்ற நாங்கள் யாரும் விடப்போவது கிடையாது. அது இந்த தேர்தலில் கண்டிப்பாக தெரியும். இப்போது தேர்தல் அறிக்கையில், எடப்பாடி, சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்போம் என்று அறிவிக்கவே இல்லை. அப்படிப்பட்ட ஒரு கட்சி கூட கூட்டணி வைத்திருக்கிறார்கள். அன்புமணியை தோற்கடிப்பது தான் எங்களுடைய முதல் நோக்கமாவே இருக்கும். அதே போன்று, கண்டிப்பாக எடப்பாடியின் டெபாசிட்டையும் காலி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

* சித்திரகுப்தனாக மாறிய எடப்பாடி: வீரபாண்டியன் ‘கலாய்’
வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று அளித்த பேட்டி: நாங்கள் செல்லுகிற இடமெல்லாம் தமிழ் மக்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கே வெற்றியை தேடித்தர வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். அதற்கு பிரதான காரணம் தமிழக முதல்வர் முன்மொழிகிற அரசியல்தான். டெல்லி மற்றும், தமிழ்நாடு அணி என்று அவர் சொல்லியிருப்பது இன்னும் ஆழமானது. ஜனநாயகத்திற்கு விரோதமான நேர் எதிர் அரசியலை நாட்டின் பிரதமரே தலைமை தாங்கி நடத்துகிறார். ஜனநாயகத்தின் குரல்வளையை ஒன்றிய பாஜ ஆட்சி நெரிக்கிறது. பாஜவுடைய அரசியல் வளையத்திற்குள் தேர்தல் ஆணையம் அடங்கி விட்டது.

அசாமில் பாஜ ஆட்சி, அங்கே அதிகாரிகள் யாரையும் மாற்றுவதில்லை. பீகாரில், ஒடிசாவில் அவர்கள் ஆட்சி நடந்தபோது யாரையும் மாற்றவில்லை. ஆனால் தமிழ்நாட்டில், கேரளாவில் மட்டும் மாற்றுகிறார்கள். இது ஜனநாயகத்தை சிதைப்பதாகும். காஸ் தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணமே ஒன்றிய அரசுதான். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி வசவு பாடுகிறார். அவர் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக அல்ல, சித்திரகுப்தனாக மாறிவிட்டார். அவரிடம் அரசியல் எதிர்பார்க்கிறோம். அரசியல் வறட்சி அவரிடம் இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை பேசுபொருளாகி இருக்கிறது. எனவே திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி வாகை சூட வேண்டும். அதற்கு தமிழ் மக்கள் மறவாமல் எங்கள் கூட்டணியில் அவரவர் சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தலில் பாஜவுக்கும், அதிமுகவுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள், எங்களுக்கு மகத்தான வாகை சூடி தருவார்கள். அந்த நம்பிக்கை எங்கள் கட்சிக்கு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: