தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ரகசிய பார்ட்டி வைத்த சி.வி.சண்முகம் தரப்பு: தலா ரூ.10 ஆயிரம் பட்டுவாடா?

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி சண்முகம் போட்டியிடுகிறார். இந்நிலையில் மயிலம் தொகுதி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு சில வாரங்களுக்கு முன்பு மயிலத்தில் உள்ள அதிமுக நிர்வாகி வீட்டில் வைத்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதேபோன்று நேற்று முன்தினம் மயிலம் தொகுதிக்குட்பட்ட கொடியம் கிராமத்தில் பிரசாரத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு பணப் பட்டுவாடா செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று மயிலம் தொகுதியில் வாக்குச்சாவடி பணியில் அமர்த்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மயிலம் அடுத்த வல்லம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பார்ட்டியை அதிமுக தரப்பு ஏற்பாடு செய்துள்ளது. பின்னர் மண்டபத்தில் பார்ட்டி வைத்தால் விஷயம் வெளியே கசிந்து யாராவது வீடியோ எடுத்து போட்டு சமூக வலைதளத்தில் வைரலாக்கி விடுவார்கள் என்று பயந்துபோன அதிமுக தரப்பு அதே பகுதியிலுள்ள மாந்தோப்பு ஒன்றில் குவார்ட்டர் மற்றும் கோழி பிரியாணி விருந்துடன் பார்ட்டி வைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் தற்போது அம்பலமாகி வருகின்றன.

சிவி சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடந்ததாக கூறப்படும் இந்த பார்ட்டில் பங்கேற்ற ஒவ்வொரு ஆசிரியருக்கும் ரூ.10,000 கவரில் போட்டுக் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் முதியவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களை மூளை சலவை செய்து அதிமுகவிற்கு வாக்களிக்க செய்ய வேண்டுமென ரகசிய கட்டளை பிறப்பித்த தகவல் எப்படியோ வெளியே கசியத் தொடங்கி இருப்பதால் அதிமுக வட்டாரம் கலக்கமடைந்து உள்ளது. இதுகுறித்த விசாரித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: