திருச்செந்தூர் பாஜக வேட்பாளர் மீது கொலை உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவை…

திருச்செந்தூர்: திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. திருச்செந்தூர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் தற்போது அந்த கட்சியினுடைய ஓ.பி.சி அணியினுடைய மாநில துணை தலைவராக உள்ளார். இவர் மீது கொலை, கொலை முயற்சி என தற்போது வரை மொத்தம் 12 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. 43 வயதாகும் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் ஆவார்.

முன்னதாக அதிமுக-வில் இருந்த இவர் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு மோசமான தோல்வியை சந்தித்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் மீது ஏரல், திசையன்விளை காவல் நிலையங்களில் தலா ஒரு குற்ற வழக்கும், ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளும் உள்ளன. சென்னையிலும் இவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

தன்னிடம் வேலை பார்த்த பெண்ணுக்கு காதல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த பிரச்சனையில் சந்தோஷ்ராஜ் என்பவரை கடத்தி கொலை செய்தார் என்பது கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் மீதான முக்கிய வழக்காகும். வீடுகள் சூறையாடல், கார் உடைப்பு, அடிதடி, கொலை, கொலை முயற்சி, அரசியல் முன்விரோதம் போன்ற வழக்குகளில் இவர் சிக்கி இருப்பதால் இவர் வாக்கு சேகரிக்க செல்லும் பகுதியில் உள்ளூர அச்சம் கொள்வதாக கூறப்படுகிறது.

Related Stories: