காரைக்குடிக்கு விஜய் நாளை வருகை மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் தகர சீட்டால் மூடி மறைப்பு: தீவிர விபத்து தடுப்பு நடவடிக்கைகள்

காரைக்குடி: காரைக்குடிக்கு விஜய் நாளை வருவதை முன்னிட்டு, விபத்து தடுப்பு நடவடிக்கையாக தேவர் சிலை பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் தகர சீட்டால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து தமிழகத்தின் பல ஊர்களில் மாநாடு என்னும் பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்தினார். அப்போது கூட்ட நெரிசலில், விபத்தில் அவரது ரசிகர்கள் இறந்தனர். ஆனால், கரூரில் நடந்த பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது நாடு முழுவதையும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் விஜய்யை பார்க்க அவரது வாகனத்தை ஓட்டி வந்து டூவீலரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவனும் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று நெல்லை, தூத்துக்குடி மாவடங்களில் பிரசாரம் செய்ய வந்த விஜய்யை பின்தொடர்ந்து டூவீலர்களில் வந்த அவரது ரசிகர்கள் பல இடங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தினர். அவரைக் காண வந்த பெண்களும் மயக்கமடைந்தனர்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் கூட நடிகர்களின் பின்னே செல்லாமல், படிப்பை கவனியுங்கள் என இளைஞர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். யானை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே என்பதைப் போல, பிரசாரம் செய்ய விஜய் வருவார் முன்னே; விபத்து வரும் பின்னே என்பது உறுதியாகி வருகிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதி தவெக வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் டி.கே பிரபுவை ஆதரித்து நாளை மதியம் 1 மணி முதல் 4 மணி வரை விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி இருந்தனர். இதையடுத்து மாவட்ட எஸ்பி ஆய்வு செய்து காரைக்குடி தேவர் சிலை அருகே பிரசாரம் செய்ய இடம் ஒதுக்கியுள்ளனர்.

இந்நிலையில், விஜய்யை காண வரும் அவரது ரசிகர்கள், அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் மீது ஏறி விபத்து ஏற்படக் கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்களை தகர சீட்டால் மூடி மறைத்துள்ளனர்.

Related Stories: