பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி

 

பெரம்பலூர்,மார்ச் 29: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்டக் கலெக்டர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இரண்டு பயிற்சி மையங்களிலும் மாவட்ட கலெக்டர் மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 387 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியாற்றவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு, அந்தந்த பகுதிகளின் மண்டல அலுவலர்களால் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே நடத்தப்பட்டது. அதனடிப்படையில், ஏற்கனவே பயிற்சி பெற்ற பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான 40 மண்டல அலுவலர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான 35 மண்டல அலுவலர்களும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பெடுத்தனர்.

இந்தப் பயிற்சி வகுப்பில், வாக்குப் பதிவு நாளன்று கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், வாக்குப்பதிவு தொடங்கும் போதும், முடிவுறும்போதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக அந்தந்த தொகுதிக்கு நியமிக்கப் பட்டுள்ள மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும், விவிபேட் கருவிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மாதிரி கருவிகளை வைத்து விரிவாக எடுத்துரைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அஞ்சல் வாக்கு சீட்டு விண்ணப்பம் பெறுவது குறித்து மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனிதா (பெரம்பலூர்), சக்திவேல் (குன்னம்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) வேல்முருகன், (பொது) சொர்ணராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் சுந்தர் ராமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார்கள் சத்தியமூர்த்தி (பெரம்பலூர்), சின்னதுரை (குன்னம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: