தா.பழூர் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

தா.பழூர், மார்ச் 28: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவையொட்டி கடந்த 19.3.2026 அன்று காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அரக்கு மாளிகை அடுத்தடுத்த நாட்களில் அர்ஜுனன் தபசு மாடு திருப்புதல் அரவான் பலி சக்கர வாரம் கோட்டை ஆகியவை மகாபாரத பாராயணத்தில் நிகழ்த்தப்பட்டது. தினந்தோறும் மாலை திரௌபதி அம்மன், கிருஷ்ணன், தருமன் பீமன் அர்ஜுனன் ஆகிய தெய்வங்கள் வீதியுலா காட்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை திரௌபதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் ஹோமம் செய்யப்பட்டு பூக்குழி பூஜைகள் செய்யப்பட்டது. ஆலயத்தில் இருந்து பூங்கரகம் பிரத்யேகமாக செய்யப்பட்டு புறப்பாடு செய்யப்பட்டு தா.பழூரின் அனைத்து வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்து சேர்ந்தது. தொடர்ந்து அக்னி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்திற்கு வந்து சேர்ந்தது.

முதலில் அக்கினி கரகம் ஏந்திய பக்தரும் தொடர்ந்து பூங்கரகம் ஏந்திய பக்தரும் குண்டம் இறங்கி தீ மிதித்தனர். பிறகு நேர்த்திக்கடன் செலுத்த வந்த நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவை பார்க்க சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 1000க்கும் அதிகமான மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக வரும் ஞாயிற்றுக்கிழமை அகோர வீரபத்திர பூஜையும், ஏப்ரல் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.

 

Related Stories: