பெரம்பலூர்,மார்ச் 23: தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு, இந்தியத்தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 15ம் தேதி மாலைமுதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30ஆம்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும். ஏப்-7 ஆம்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.
வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப்-9ஆம் தேதி கடைசி நாளாகும். மே மாதம் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப் படும். மே மாதம் 6ஆம்தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வரும் என அறிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின் படி, நகராட்சி/ பேரூராட்சிப் பகுதியில் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் ஆகியவை செய்யக்கூடாது.
பெரம்பலூர் நகராட்சியை பொருத்தவரை அதிமுக, திமுக, பாமக, விசிக, மதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தங்கள் தலைவரை வாழ்த்தவும் வரவேற்கவும் மட்டுமன்றி தனிப்பட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் போஸ்டர்களை, பிளக்ஸ் பேனர்களை ஒட்டுவதற்கு தேடும் பிரதான இடம் பெரம்பலூர் நான்கு ரோடு மற்றும் மூன்றுரோடு மேம்பாலங்கள் ஆகும்.
குறிப்பாக பெரம்பலூர் நகருக்கு வருவோர் நகரிலிருந்து வெளியே செல்வோர், சென்னை- திருச்சி மார்க்கமாக செல்வோர் என பலதரப்பட்ட பயணிகளை, வாகன ஓட்டிகளை ஈர்க்கும் இடமாக இருப்பதால், பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தின் உட்புறம் வெளிப்புறம், கான்கிரீட் தூண்கள், மேம்பால சுவர்கள் அனைத்தையும் அதன் அளவுக்குத் தகுந்தபடி பிளக்ஸ் பேனர்களை ஒட்டி ஆக்கிரமித் திருப்பது வழக்கம். அதேபோல் துறைமங்கலம் 3 ரோடு மேம் பால சுவர்பகுதிகளும் அரசியல் வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் கடந்த 15ஆம்தேதி மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு வருவாய்த்துறை சார்பாக பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் இங்குள்ள ராட்சத பிளக்ஸ் பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது தேசிய நெடுஞ் சாலை மேம்பாலங்கள் தேர்தல் நடத்தை விதிகள் காரணத்தால் சுத்தமாக பளிச் சென்று காணப்படுகிறது.
