பெரம்பலூர் பனிமய மாதா தேவாலயத்தில் இயேசுவின் பாடுகளை தத்ரூபமாக நடித்து காட்டும் பாஸ்கா நிகழ்ச்சி

பெரம்பலூர், மார்ச் 28: இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்து மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து உயிர்த்து எழுந்ததை நினைவூட்டும் தவக்காலம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கடை பிடிக்கப் பட்டு இறுதியாக ஈஸ்டர் பண்டிகையாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி தவக்காலமானது சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இன்று சனிக்கிழமையோடு தவக்காலம் முடிவடைந்து, நாளை ஞாயிற்றுக்கிழமை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித வாரம் தொடங்குகிறது.இதற்காக ஞாயிற்றுக்கிழமை குருத்து ஓலை ஞாயிறாகவும், இயேசு கடைசி இரவுஉணவை சீடர்களுடன் பகிர்ந்து கொண்ட வியாழக்கிழமை புனித வியாழன் எனவும், இயேசு சிலுவையில் மரித்த வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் கடை பிடிக்கப்பட்டு, சனிக்கிழமை இரவு 12மணியளவில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி நேற்று(27ம்தேதி) வெள்ளிக்கிழமை மாலை பெரம்பலூர் புனித பனிமய மாதா தேவாலயத்தில் இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாதை நிகழ்ச்சி, கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நாடகம் போல் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குருவும், புனித பனிமயமாதா தேவாலயத்தின் பங்கு குருவமான பேரருள்திரு சுவக்கின் அடிகளார் முன்னிலையில், கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் 30-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ இறை மக்களால் நடித்துக் காண்பிக்கப்பட்டது.

இதனை பெரம்பலூர் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், அன்பியம் குழுவினர், இளைஞர் மன்றத்தினர், பங்குப் பேரவையினர் மற்றும் பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, பாத்திமா புரம், வடக்கலூர், திருமாந்துறை, திருவாலந்துறை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த கத்தோலிக்க பொதுமக்களும் பார்வையிட்டனர்.

 

 

Related Stories: