பெரம்பலூர், மார்ச் 28: பெரம்பலூரில் தையல், அழகுக்கலை இலவசப் பயிற்சியைப் பெற மகளிருக்கு அழைப்பு. பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் இலவசமாக தையல் மற்றும் அழகுக் கலை பயிற்சிபெற மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சிமையத்தில் இலவசமாக தையல் மற்றும் அழகு கலை பயிற்சி மகளிருக்கு அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வரும் ஏப்ரல் 6ம்தேதி துவங்குகிறது.
பயிற்சியில் சேர விரும்புவோர் 19 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட, குறைவாக, எழுதப் படிக்கத் தெரிந்தவர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்த வேண்டும். தையற் பயிற்சி 31 நாளும், அழகு கலை பயிற்சி 35 நாட்கள் என அளிக்கப்படவுள்ளது. பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் அலுவலகத்தில் தகுந்த ஆவணங்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் வரும் ஏப்ரல் 5ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04328 – 277896, 8489065899, 9488840328 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மையத்தின் இயக்குநர் முருகையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
