சென்னை: டெல்லியில் அடிக்கடி நடந்த பஞ்சாயத்து, மிரட்டலுக்கு பிறகு அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது. சென்னை வந்துள்ள பியூஸ் கோயல் பேச்சுவார்த்தையை நடத்துகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக(அன்புமணி), அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக-பாஜக கூட்டணி என்பது கடந்த ஆண்டு ஜூன் மாதமே உறுதி செய்யப்பட்டது.
அதன் பிறகு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை என்பது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் கூடுதல் எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. அதாவது 50 தொகுதிகள் வரை கேட்பதாக முதலில் தகவல் வெளியானது. தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை, மதுரை மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் இதுவரை பலகட்ட இருதரப்பு ஆலோசனைக் கூட்டங்கள், தொகுதி பங்கீடு தொடர்பாக நடைபெற்று இருந்தாலும் அதில் தொகுதி பங்கீடு நிறைவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது.
அதே நேரத்தில் தவெகவை கூட்டணிக்கு இழுப்பது தொடர்பாக பாஜ மேலிடம் பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தியது. அவர்கள் வைக்கும் கோரிக்கை மற்றும் தொகுதிகளை தர முடியாது என்று எடப்பாடி அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து தவெக தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்து விட்டது. ஆனாலும், பாஜ மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்காமல் எடப்பாடி இழுத்தடித்து வந்தார். இதனால் கோபமான ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், இனி எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதனால், அவரது கடந்த 20ம் தேதி சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து எடப்பாடியை டெல்லிக்கு வரும்படி அமித்ஷா அழைப்பு விடுத்தார். எடப்பாடியும் 20ம் தேதி அன்று காலையில் அவசரம், அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். பல மணி நேரம் காத்திருப்புக்கு பின்னர் அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தார். அப்போது பாஜவுக்கு 31 தொகுதிகள், புதிய நீதிக்கட்சி, ஐஜேகேவுக்கு தலா 2 தொகுதிகள், பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும்.
இவர்களில் பலரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்கள். அமமுகவுக்கு 9, பாமகவுக்கு 18, தமாகாவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிடும் என்று அமித்ஷா அறிவித்தார். இதை எடப்பாடியும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வருவார். அவருடன் ஒப்பந்தம் போடுங்கள் என்று அமித்ஷா கூறியிருந்தார். இதற்கிடையில் டிடிவி தினகரனும் டெல்லி புறப்பட்டு சென்றார்.
இதனால், நேற்று முன்தினம் சென்னை வர இருந்த பியூஸ் கோயலின் பயணம் 2வது முறையாக ரத்து செய்யப்பட்டது. டெல்லி சென்ற டிடிவி தினகரன் பல மணி நேரம் காத்திருந்து அமித்ஷாவையும், பியூஸ் கோயலையும் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டி என்பதை ஏற்க முடியாது என்று கூறிவிட்டார். அப்போது 11 தொகுதிகள் வரை அமமுகவுக்கு தர பியூஸ் கோயல் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அடிக்கடி நடந்த டெல்லி பஞ்சாயத்து, மிரட்டலுக்கு பிறகு அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் முடிவாகியுள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று காலை சென்னை வருகிறார். சென்னை வரும் எடப்பாடியை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. அப்போது தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் என்பது கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பியூஸ் கோயலை சந்தித்து பேசி தங்களுக்கான ெதாகுதிகளுக்கான பட்டியலிலும் கையெழுத்திட உள்ளனர். இதற்கிடையில் வருகிற 30ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான மனுதாக்கல் தொடங்க உள்ளது. இன்னும் ஒரு வாரம் தான் எஞ்சியுள்ளது. அதற்குள் தொகுதி பங்கீட்டை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக-பாஜ கூட்டணி உள்ளது.
