அதிமுகவின் அமைப்பு செயலாளராக இருப்பவர் செம்மலை (80). 1980ம் ஆண்டு சேலம் தாரமங்கலம் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி வெற்றி பெற்றவர். பின்னர் அதிமுகவில் இணைந்தார். ஓமலூர், மேட்டூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கூவத்தூரில் சசிகலா தலைமையில் எம்எல்ஏக்கள் ஒன்று கூடி, சசிகலாவை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தவுடன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த செம்மலை, எனது தொகுதி மக்களிடம் கேட்டு விட்டு வருகிறேன் என கூறிக்கொண்டு, கூவத்தூரில் இருந்து தப்பி வெளியே வந்தார். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து பணியாற்றினார்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்த செம்மலை, எடப்பாடி பழனிசாமி அணியில் சேர்ந்து கொண்டார். இனிமேல் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்பதில் உறுதியாக இருந்த அவர், மேல்சபை எம்பி பதவி கிடைத்தால் சிறப்பாக பணியாற்றுவேன் என கூறிவந்தார். 2 முறை நடந்த மேல்சபை எம்பி தேர்தலை எதிர்நோக்கியிருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அவரை கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் நடந்த மேல்சபை தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் அதுவும் கைநழுவிபோனது. இந்நிலையில் செம்மலை திமுகவுக்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘எனக்கு வேண்டாதவர்கள் கிளப்பிவிட்ட புரளி’’ என்றார்.
