சென்னை: திமுக கூட்டணியிலிருந்து தவாக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில், கட்சியின் தலைவர் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடரும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்தது.
தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் தமிழக வாழ்வுரிமை கட்சி பங்கேற்றது. இந்த நிலையில் கூட்டணியில் இருந்து விலகுவதாக வேல்முருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று அளித்த பேட்டி: திமுக பேச்சு வார்த்தைக்குழுவுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். அதில் எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நாங்கள் ஒரு இடத்தை எங்களால் ஏற்க முடியாது என்றும், கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தோம். மேலும், தமிழக மக்களின் நலனுக்கான திமுக அரசிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். எங்கள் கோரிக்கைகளை அரசு பொருட்படுத்தவில்லை.
இதனால் திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகுகிறது. நாட்டை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தவாக இடம்பெறாது. எனவே எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். அவர்களின் கருத்தை கேட்டு கூட்டணி குறித்து முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
