கோவை மாவட்டத்தில், அதிமுக கூட்டணியில், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி யாருக்கு? என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனாலும், சிட்டிங் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், தனக்குத்தான் மீண்டும் ‘சீட்’ என்ற பெரிய கனவில் இருக்கிறார். ‘‘நான், முன்னாள் துணை சபாநாயகராக இருந்துள்ளேன், முன்னாள் அமைச்சராக இருந்துள்ளேன், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கிற சீனியர்களில் நானும் ஒருவன்…
எனக்கு ‘சீட்’ தராமல் விட்டுருவாங்களா… என்ன…?’’ என சக நிர்வாகிகளிடம் கெத்து காட்டி வருகிறார். இதற்கிடையில், ‘‘ஐந்து வருடமாக தொகுதிக்குள் தலை காட்டவே இல்லை, ஏதாச்சும் செய்தால்தான் மீண்டும் தலை காட்ட முடியும்… என்ன தலைவரே சொல்றீங்க….?’’ என அவரது அடிபொடிகள் ஐடியா கொடுக்க… ‘‘இருக்கவே இருக்கு, மக்கள் சந்திப்பு நடத்திட்டால் போச்சு…’’ என பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்க, அவரது சகாக்கள் ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இத்தொகுதியில், முதல்கட்டமாக பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட சில வார்டுகளை தேர்வுசெய்து, அங்கு ‘மக்கள் சந்திப்பு’ என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அப்பகுதி மக்களை கட்டாயப்படுத்தி வரவழைத்து, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் என்னவெல்லாம் செய்துகொடுத்தோம் என நினைவுப்படுத்தி வருகின்றனர்.
அப்படியே தேர்தல் பரப்புரையும் செய்து வருகிறார்கள். இந்நிகழ்வுக்கு போதிய வரவேற்பு இல்லாவிட்டாலும், கரன்சி கொடுத்து, ஆட்களை வரவழைத்து, இந்த நிகழ்ச்சியை அரைகுறையாக நடத்தி வருகின்றனர். இதை பார்த்து பலரும், ‘‘என்னாது… மக்கள் சந்திப்பா…? ஐயா, இத்தனை நாட்கள் எங்கே போனாரு….? என கலாய்த்து வருகின்றனர்.
