சென்னை: எஸ்சி, எஸ்டி ஆணைய தலைவர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான டாக்டர் ஜி.தமிழ்வாணன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நீதி வழங்கும் பணியிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கும் பணியிலும் திறம்படச் செயல்பட்ட அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசு மரியாதையுடன் அடக்கம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தமிழ்வாணன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்தார். 10 நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று அதிகாலை 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சென்னை நொளம்பூர், பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் அதிகாரிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் மாலை அம்பத்தூர் மின் மயானத்தில் ஆவடி ஆணையரகம் சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அம்பத்தூர் மின் மயானத்தில் வைக்கப்பட்ட நீதிபதி தமிழ்வாணனின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் இமயம் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
