தமிழக தேர்தல் களம் என்றாலே சுவர்களில் மின்னும் வர்ணங்கள், பிரமாண்ட கட்-அவுட்கள், தெருவெங்கும் அதிரும் பிரசாரப் பாடல்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த மரபார்ந்த முறைகளைத் தாண்டி, கண்ணுக்குத் தெரியாத ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) மற்றும் ‘அல்காரிதம்கள்’ (Algorithms) தான் தேர்தலின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகின்றன.
* ஓட்டுப் பட்டியல் இனி வெறும் காகிதமல்ல; அது ஒரு ‘டேட்டா’!
முன்பெல்லாம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு வீடு வீடாக ஏறுவார்கள். இப்போது நிலைமை தலைகீழ். தேர்தல் ஆணையம் வழங்கும் பி.டி.எப் பட்டியல்களை ஏஐ மென்பொருள்கள் சில நிமிடங்களில் அலசி ஆராய்ந்து விடுகின்றன. ஒரு குறிப்பிட்ட தெருவில் எந்தச் சமூகத்தினர் அதிகம்? எந்த வயதினர் அதிகம்? கடந்த முறை அங்கு யாருக்கு ஓட்டு விழுந்தது? போன்ற தரவுகளை நவீன செயலிகள் துல்லியமாகப் புள்ளிவிவரங்களாக மாற்றிக் கொடுக்கின்றன.
* மைக்ரோ டார்கெட்டிங்: உங்கள் போனுக்கு வரும் ‘ஸ்பெஷல்’ மெசேஜ்!
தமிழகத்தில் பிரதான கட்சிகள் முதல் புதிய கட்சிகள் வரை தங்களின் ‘ஐடி விங்’ மூலம் வாக்காளர்களை அணுக ‘மைக்ரோ டார்கெட்டிங்’ முறையை கையில் எடுத்துள்ளன. ‘நீங்கள் ஒரு வேலையில்லாத இளைஞரா?’ – உங்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிமொழி குறித்த வீடியோ வரும். ‘நீங்கள் ஒரு இல்லத்தரசியா?’ – உங்களுக்கு விலைவாசி குறைப்பு குறித்த விளம்பரம் வரும். சமூக வலைதளங்களில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள், எதைப் பகிர்கிறீர்கள் என்பதை வைத்து ‘சென்டிமென்ட் அனாலிசிஸ்’ மூலம் உங்கள் அரசியல் சார்பை ‘ஏஐ’ கண்டறிந்து, அதற்கேற்ப விளம்பரங்களை உங்கள் திரையில் பாய்ச்சுகிறது.
* நிமிடங்களில் தயாராகும் ‘ரீல்ஸ்’, போஸ்டர்கள்!
ஒரு காலத்தில் பிரசார வீடியோ எடுக்க பல லட்சங்கள் செலவானது. ஆனால் இப்போது ‘ஏஐ’ கருவிகள் மூலம் சில நிமிடங்களில், வேட்பாளரின் முகம் பொறித்த ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கிவிட முடிகிறது. இது சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
* கள்ள ஓட்டுக்கு செக்! டிஜிட்டல் வார் ரூம்கள்!
சென்னை போன்ற பெருநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சிகளின் ‘டிஜிட்டல் வார் ரூம்கள்’ 24 மணி நேரமும் இயங்குகின்றன. ஒரே ஆள் இரண்டு இடங்களில் வாக்காளராக இருப்பதை ஏஐ மூலம் எளிதாகக் கண்டறிந்து விடலாம். மேலும், எதிரணி பரப்பும் ‘டீப் பேக்’ எனப்படும் போலி வீடியோக்களை உடனுக்குடன் கண்டறிந்து முறியடிக்க சிறப்பு தொழில்நுட்பக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் வளர வளர தேர்தல் முறையும் மாறுகிறது. ‘வாக்காளர்களின் மனதை வெல்ல இப்போது மேடைப் பேச்சுகள் மட்டும் போதாது, அல்காரிதம்களின் ஆதரவும் தேவை’ என்ற நிலைக்கு தமிழக அரசியல் தள்ளப்பட்டுள்ளது. மனித உழைப்பும், ஏஐ-யின் வேகமும் இணையும் இந்த ‘டிஜிட்டல் சாணக்கியம்’ யாருக்கு வெற்றியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
* உயிர்பெறும் தலைவர்கள்
தமிழக தேர்தலில் ‘ஏ.ஐ’-யின் மிக முக்கியமான தாக்கம், மறைந்த தலைவர்களை மீண்டும் பிரசார மேடைக்குக் கொண்டு வருவதுதான். கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவம் மற்றும் குரலை ‘ஏஐ’ மூலம் தத்ரூபமாக உருவாக்கி, அவர்கள் பேசுவது போன்ற வீடியோக்கள் ஏற்கனவே வைரலாகி வருகின்றன. தங்கள் பிரியமான தலைவர் மீண்டும் பேசுவதைப் போன்ற உணர்வு வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் ஆலோசகர்கள்.
