எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் துப்பாக்கி முனையில் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் நேற்று கைது செய்தனர். தமிழகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், கைது செய்வதும், படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்களை பறித்து செல்வதும் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த கிரிஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறுமுகம், இளங்கோவன், சூரியனேசன், தமிழ்செல்வன், ஐயப்பன், ருத்திரன், ஆசைத்தம்பி, கிருஷ்ணராஜ், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்தி ராஜா, அக்கரைப்பேட்டையை சேர்ந்த தீபன்ராஜ், பிரவீன், தயாளன், சாமந்தான்பேட்டை சேர்ந்த கபிலன், முகிலன் ஆகிய 14 பேர் கடந்த 14ம்தேதி இரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதே போல் காரைக்கால் கீழக்காசாகுடிமேடு பகுதியை சேர்ந்த நேசம் மலரின் விசைப்படகில் மோகன், சின்னையன், நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த கார்த்திக், அருண், ரத்தினவடிவேல், முகிலன், தரன், யாதவன், அம்பலவாணன், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த சபரிநாதன், தரங்கம்பாடியை சார்ந்த ஞானவேல் என 11 பேரும் நேற்றுமுன்தினம் அதிகாலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை காரைநகர் கடற்கரை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர்.

மேலும் 2 விசைப்படகில் இருந்த 25 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்ததோடு, பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப்படகுகளுடன் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மீனவர்கள் கூறுகையில், 25 மீனவர்கள், 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: