ராமதாஸ் இல்லம் முன் நடனம் பாமகவினர் மீது போலீஸ் தடியடி: 5 பேர் காயம்

திண்டிவனம்: திண்டிவனம் மயான கொள்ளை ஊர்வலத்தில் ராமதாஸ் இல்லம் முன்பு நடனமாட முயன்ற பாமகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலய 221ம் ஆண்டு மாசி அமாவாசை மயான கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் வேடமணிந்து ஆடிவந்த நிலையில் அதிமுக, தவெக தரப்பினர் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி கட்சி கொடியை வைத்து ஆடினர். இதையடுத்து போலீசார் கட்சிக் கொடிகளை பறித்து அனுப்பி வைத்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே பாமகவினர் கொடியை வைத்து ஆட்டம் போட்டு செல்வது வழக்கம்.

இந்தாண்டு பாமக 2 அணியாக இருப்பதால் அவர்களுக்குள் தகராறு ஏற்படும் என்று கருதி காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு நடனம் ஆட முயன்ற சிலரை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் போலீசாருக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் 4 மணிக்கு முடிக்க வேண்டிய ஊர்வலம் 5 மணி ஆகியும் முடியாததால் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலையாமல் நடனமாட முற்பட்ட நிலையில், டிஎஸ்பி பிரகாஷ் உடனே கூட்டத்தை கலைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து ராமதாஸ் இல்லம் முன்பு கூடிய பாமகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து அங்கிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறியபடி ஓட்டம் பிடித்தனர். இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சிலர் சிக்கினர். பின்னர் லேசாக காயமடைந்த 4 பேர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்படவே மாவட்ட செயலாளர் ஜெயராஜ்(ரா) தலைமையில் பாமகவினர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அவர்களிடம் ஏடிஎஸ்பி தினகரன் பேச்சு நடத்திய நிலையில் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதேபோல் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியில் நடந்த மயானக் கொள்ளை ஊர்வலத்திலும் நடனமாடி கலையாமல் நின்றவர்களை போலீசார் எச்சரித்தனர். பள்ளி முடிந்து வீடுதிரும்பும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவர் எனக்கூறியும் கலைய மறுக்கவே லேசான தடியடி நடத்தி கூட்டத்தில் கலைத்தனர். இதில் ஒரு பெண் காயமடைந்த நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Related Stories: