1. முதல்வர் ஆட்சியில் பங்கு இல்லை என்று சொன்ன பிறகும் காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர் உள்பட சிலர் தொடர்சியாக இதைப் பற்றிப் பேசுவதன் பின்னணி என்ன?
2026 தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான போர் என்று முதல்வர் இதைக் கோட்பாடு அடிப்படையில் சொல்கிறார். பாஜ முன்னெடுக்கும் வலதுசாரி அரசியலுக்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி முன்னெடுக்கும் சமூகநீதி அரசியலுக்கும் தான் போட்டியே நடக்கிறது. தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் எப்படியாவது குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று பாஜ உள்ளிட்ட அமைப்புகள் நுட்பமாக முயற்சிக்கிறார்கள். அதற்குத் தேர்தல் களத்தில் பாஜவுக்கு ஆதராவாகக் கிளை அமைப்புகளாக தவெகவும் நாம் தமிழர் கட்சியும் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ் இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி அமைத்து, அதற்கு தலைமை தாங்கிக்கொண்டிருக்கும்போது; தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் ஆட்சியில் பங்கு குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை. பீகார் உள்பட எந்தத் தேர்தலிலும் ஆட்சியில் பங்கு குறித்துப் பேசவில்லை. இப்போது இவர்கள் புதிதாகக் கண்டுபிடித்தது போல இவர்கள் முன்னெடுக்கிறார்கள். விசிக 1999ம் ஆண்டு தேர்தல் பாதைக்கு வந்தது முதலே ஆட்சில் பங்கு குறித்துப் பேசிவருகிறோம். விசிக தொடர்ச்சியாக விவாதத்தை ஏற்படுத்தியபோது கூட இவர்கள் பேசவில்லை. அப்போதெல்லாம் அமைதியாக இருந்தது காங்கிரஸ். ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் மட்டும்தான் கேட்பீர்களா? இந்தியா முழுவதும் கேட்பீர்களா? காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்களில் உங்களின் நிலைப்பாடு என்ன? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் தமிழ்நாட்டு தேர்தலில் மட்டும் முன்னெடுப்பதில் சந்தேகம் எழுகிறது. கோட்பாடு அடிப்படையில் பேசுகிறார்களா அல்லது சீட்டுக்காகப் பேசுகிறார்களா? இந்தக் கேள்விகான பதிலில் தான் அவர்களின் நோக்கம் நமக்குத் தெரியும்.
2. மாணிக்கம் தாகூர் விசிக மற்றும் இடதுசாரிகளுக்கு அமைச்சரவையில் இடம் கேட்பது குறித்த உங்களின் கருத்து என்ன?
மாணிக்கம் தாகூரின் இந்தக் கோரிக்கையில் நல்ல எண்ணம் இருக்கலாம் என்பதைத் தாண்டி, எந்த நேரத்தில் கேட்கிறோம் என்பது இருக்கிறது. முதலில் தொகுதிப் பங்கீடு நடத்துவதற்கு முன்பாகவே அவர்கள் இந்த கோரிக்கையை எழுப்புவதன் மூலமாக குழப்பத்தை விளைவிக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. எங்களுக்கு அமைச்சர் கேட்பவர்கள், கடந்த முறை நாங்களும் இடதுசாரிகளும் 6 சீட் வாங்கியபோது, எங்கள் மீது நல்ல எண்ணம் உள்ளவர்கள் அவர்கள் வாங்கிய தொகுதியில் இருந்து கொஞ்சம் ஒதுக்கி இருக்கலாம். அதுதான் நல்ல எண்ணம். எங்களுக்கு வேண்டியதை நாங்கள் கேட்போம்; எங்களுக்கு துணிச்சல் இல்லாமல் இல்லை. ஆனால் இந்த நேரத்தில் எங்களையும் சேர்த்துக் கேட்பதில் சூட்சுமம் இருக்கிறது எனப் புரிந்துகொள்ள முடிகிறது. தேர்தல் நேரத்தில் எத்தனை தொகுதி வாங்க வேண்டும் என்பதை எங்கள் தலைவர் முடிவெடுப்பார். எங்களுக்கு அமைச்சர் வேண்டும் என்றால் எங்கள் தலைவர் பேசுவார்.
3. இதுபோன்ற செயல்பாடுகள் வலிமையான கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதா?
திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் முதிர்ச்சியானவர்கள். அதனால் இதன் காரணமாக எந்தக் குழப்பமும் வரப்போவதில்லை. பாஜ, ஆர்எஸ்எஸ்சை வீழ்த்துவது தான் நமது இலக்கு. ஆனாலும் இது போன்று எழுப்புவதால் குழப்பம் வராமல் தடுக்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆட்சியில் பங்கு குறித்து அகில இந்தியத் தலைமை முடிவெடுத்துள்ளது, அதனால் யாரும் பேசக்கூடாது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அதையும் மீறிப் பேசுகிறார்கள் என்றால் அந்த கட்சிக்குள் ஒருமித்த கருத்து இல்லை. ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடல்ல, தனி நபரின் நிலைப்பாடாக உள்ளது என்பதை செல்வப்பெருந்தகை தெளிவுபடுத்தியுள்ளார்.
4. காங்கிரஸ் கட்சி பீகார் உள்பட பல்வேறு தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கம் இல்லாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
ராகுல் காந்தி ஒருமுறை ‘‘காங்கிரஸ் கட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்காரர்கள் வெளியேறட்டும்; கட்சியில் இருந்து குழப்பம் விளைவிக்க வேண்டாம்’’ எனச் சொன்னார். அதையே இந்த நேரத்தில் நானும் கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன். பீகார் தேர்தலில் கூட்டணியில் ஒருங்கிணைவு இல்லாததால் தான் தோல்வியடைந்தார்கள். யார் எதிரி என்பதில் முடிவெடுக்காததால் அங்கு குழப்பம் உண்டானது; இல்லையென்றால் மகத்தான வெற்றி பெற்றிருப்பார்கள். இப்போது தமிழ்நாட்டில் இவ்வாறு செய்வதன் மூலம் கூட்டணியில் சலசலப்பை உருவாக்க காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் முயற்சிக்கிறார்கள்.
* பாஜவுக்கு வாய்ப்பே இல்லை: வேல்முருகன் உறுதி
கோவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு மாநிலங்களுக்கு நிதி வாரி வழங்கப்பட்டது, ஆனால் தமிழ்நாட்டிற்கு என்று எந்த திட்டமும், நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழ் சமூகம் சந்திக்கக்கூடிய எந்த பிரச்னைகளுக்கும் மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜ அரசு இதற்கான விளைவை சந்திக்கும். பாஜ என்கின்ற அரசியல் கட்சி தமிழர் விரோத கட்சி. பாஜ இந்தியாவின் பன்முகத்தன்மை, சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு எதிரான அரசியலை செய்து கொண்டிருக்கிறது. அது பிற மாநிலங்களில் அவர்களுக்கு வெற்றியை தேடி தந்திருந்தாலும், தமிழ்நாட்டில் அதற்கு வாய்ப்பில்லை. எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று அமித்ஷா, மோடி அறிவிக்கவில்லை. சமூக நீதியை பேசி வளர்ந்த கட்சி பாமக. அதன் அதிகாரத்தை, அப்பா மகன் பிரச்னையின் காரணமாக இழப்பது என்பது சமூக நீதிக்கு ஏற்றதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
* ராகுல் பிரதமராக வேண்டும் என்றால்: இந்தியா கூட்டணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும்; மணிசங்கர் அய்யர் பேட்டி
முன்னாள் ஒன்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டி: இந்தியா கூட்டணியை வலுவாக ஒருங்கிணைக்க வேண்டும் என்றால், அதற்கு மிகச்சிறந்த நபர் மு.க.ஸ்டாலின்தான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு, இந்த கூட்டணியை முழுநேரமும் ஒருங்கிணைக்க ஒரு ஆளுமை தேவை. ஸ்டாலின் வெறும் ‘சௌகிதார் சோர் ஹை’ என்றோ, ‘சூட் பூட் சர்க்கார்’ என்றோ வெற்று அரசியல் கோஷங்களை எழுப்புபவர் அல்ல. கடந்த ஓராண்டாக அவர் பேசி வரும் ஒவ்வொரு விஷயமும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது. அவர் தேவையில்லாத முழக்கங்களை முன்வைக்காமல், தேசத்திற்கு தேவையான உண்மையான பிரச்னைகளை மட்டுமே கையிலெடுக்கிறார். எனவே, ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக இருக்க அவரே தகுதியானவர். ராகுல் காந்தி பிரதமராவதற்கு அவர் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கமாட்டார். மாறாகப் பின்னால் இருந்து கூட்டணியைத் தாங்கிப் பிடிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
