கூட்டணியை சிதைக்கும் வகையில் பேசும் காங். எம்பிக்கள் மீது தேசிய தலைமையிடம் செல்வப்பெருந்தகை புகார்: கட்சி கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கூட்டணியை சிதைக்கும் வகையில் பேசி வரும் காங்கிரஸ் எம்பிக்கள், நிர்வாகிகள் குறித்து தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சரமாரி புகார் அளித்தார். இனி கட்சி கட்டுப்பாட்டை மீறி பேசுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொமதேக, தவாக, தமிழர் விடுதலைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் சில கட்சிகள் வர உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்பிக்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, தொழில் நுட்பப் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் திடீரென ஒரு கோரிக்கை வைத்தனர். அதுவும் கூட்டணியை உடைக்கும் வகையில் கருத்துகளை பதிவு செய்து வந்தனர். தலைவர்களே கருத்து கூறாத போது இவர்கள் தெரிவித்த கருத்துகளை காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. இவர்கள் ஒவ்வொருவரின் கருத்துகளுக்கும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தரப்பிலும் உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டது. இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

நாடு முழுவதும் 24 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜ, தமிழகத்திலும் அதிமுகவுக்கு இணையாக செல்வாக்கான கட்சியாக உள்ளது. அக்கட்சியில் சக்தி மிக்க தலைவராக உள்ள அமித்ஷா, கூட்டணியில் பங்கு குறித்து பேசி வருகிறார். ஆனால் தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால் நாடு முழுவதும் தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் காங்கிரஸ், தமிழகத்தில் தேய்பிறையாகவே உள்ளது. அக்கட்சிக்கு முன்பு போல தொண்டர்கள் பலம் குறைந்து விட்டது. ஆனாலும், ஆட்சியில் பங்கு, அமைச்சர் பதவி வேண்டும் என்று பேசுவதா என்று பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் வரத் தொடங்கின.

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியிடம் நேரடியாக புகார் செய்து இருந்தார். சில நாட்கள் அமைதியாக இருந்த தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் மீண்டும் இதுகுறித்து பேச தொடங்கியுள்ளனர். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை டெல்லியில் ராகுல்காந்தி கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழகத்தில் காங்கிரஸ் என்ன நிலையில் உள்ளது என்பதை தலைவர்கள் யோசித்து பேச வேண்டும். பழைய நினைப்பில் நாம் இப்போது இருக்கக் கூடாது, பேசவும் கூடாது என்று கூறினார். ஆனால் அந்தக் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் பேச தொடங்கியபோது அவர்களை பேசக்கூடாது என்று ராகுல்காந்தி எச்சரித்து அனுப்பி விட்டார்.

இந்நிலையில் சென்னையில் கடந்த இரு நாட்களாக தங்கியுள்ள மாணிக்கம் தாகூர், மீண்டும் காங்கிரசுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று பேசத் தொடங்கியுள்ளார். கூட்டணித் தலைவர்களிடம் பேச வேண்டிய கருத்துகளை, டிவி விவாதங்களிலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் வேண்டும் என்றே மாணிக்கம் தாகூர் பேசி வந்தார். இது காங்கிரசில் உள்ள தமிழக நிர்வாகிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தேர்தலை சந்திக்காதவர்கள்தான் இந்த பிரச்னையை எழுப்பி வருகின்றனர். இந்த பிரச்னையை மாணிக்கம் தாகூர், எம்பி தேர்தலின்போது எழுப்ப வேண்டியதுதானே. தேர்தலில் திமுக தயவு வேண்டும். சட்டப்பேரவை தேர்தல் என்றவுடன் தற்போது பிரச்னையை அவர் உருவாக்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்ட தொடங்கினர்.

இதுகுறித்து புகார் செய்ய காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆகியோர் முடிவு செய்தனர். மேலும் ராகுலிடம் பேசி பயன் இல்லை. இதனால், நேரடியாக காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜூன கார்கேவிடம் புகார் செய்ய திட்டமிட்டனர். அவர் மூலம் ராகுலிடம் பேசி, இதுபோன்று தேவையில்லாமல் பேசி வரும் நிர்வாகிகள், எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த திட்டமிட்டனர். இதற்காக செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் 25 பேர் நேற்று பெங்களூரு சென்றனர். அங்கு அவர்கள் கார்கேவை சந்தித்து புகார் செய்தனர். எம்பிக்கள் தேவையில்லாமல் பேசியதை ஆதாரத்துடன் கார்கேவிடம் புகாராக அளித்தனர். இவர்களின் பேச்சு என்பது கூட்டணியில் உள்ள நமக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். இனிமேல் அப்படி பேசுபவர்களுக்கு கடிவாளம் போட வேண்டும். தொடர்ந்து பேசினால் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது என்றும் அப்போது வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்களின் தன்னிச்சையான போக்கு நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பெங்களூரு செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: எனது பெங்களூரு பயணம் திடீர் பயணம் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் இருக்கிறார். அவரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து எடுத்துக் கூறி ஆலோசனை நடத்துவதற்காக தான் செல்கிறேன். மதுரையில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எங்களுக்கு என்ன சொன்னது. யாரும் பொதுவெளியில் கூட்டணி பற்றி பேசக்கூடாது. கிளியராக ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் 3 பேரையும் விட வேறு யாரேனும் பெரியவர்கள் இருக்கிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலை மதிப்பவன் நான். கட்சி என்ன சொல்கிறதோ?. அந்த வழிகாட்டுதலின்படி அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். அதற்கு மேல் யாரும் பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றால் எனக்கு தெரியவில்லை.

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 நபர் கமிட்டி கிரிஸ் சோடங்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டிக்கு தான், கூட்டணி குறித்து பேசுவதற்கு அதிகாரம் உள்ளது. மாணிக்கம் தாகூர் இவ்வளவு காலம் பேசாமல், தேர்தல் நடக்கும் நேரத்தில் ஏன் பேச வேண்டும். பேசுவதை தவிர்க்க வேண்டும். அறைக்குள் பேசுவதை பொதுவெளியில் பேசக்கூடாது. நான் என்ன வேண்டும் என்றாலும் பேசுவேன் என்று செயல்பட்டால், கூட்டணி என்று ஒன்று எதற்கு?. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பேசுபவர்கள், செயல்படுபவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக ஆலோசிப்பதற்காகத்தான், என்னை பெங்களூரு அழைத்துள்ளனர். அதற்காக தான் நான் செல்கிறேன். ஜனநாயகத்துக்கு முரணாக, அகில இந்திய காங்கிரஸ் வழிகாட்டுதலுக்கு எதிராக யார் நடந்தாலும் செயல்பட்டாலும் தவறு தவறுதான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: