புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக நாராயணசாமி இருந்தபோது ஊழலில் சிக்கியிருந்தாகவும் ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் புரிந்ததாகவும், ஏடிஎம் மெஷின்போல் செயல்பட்டு காங்கிரஸ் தலைமைக்கு நிதி கொடுத்ததாக சராமரியாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு மானியம் குறைத்துதான் தந்தது. ஆண்டுக்கு ரூ.2,200 கோடிதான் தந்தது. இப்படியிருக்க எப்படி ஊழல் நடந்திருக்க முடியும். காங்கிரசுக்கு நிதி கொடுத்ததாக கூறியது அபாண்டமான குற்றச்சாட்டு.
இதெற்கெல்லாம் அமித்ஷா ஆதாரத்தை தர வேண்டும். யார் ஊழல் செய்தார்கள், இப்போது யார் ஊழல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். போலி மருந்து வழக்கில் சிக்கியுள்ள சபாநாயகர் செல்வத்தையும், தனது சொத்துகளை காப்பாற்ற பாஜவில் சேர்ந்த நமச்சிவாயத்தையும் வைத்துக் கொண்டு மேடையில் அமித்ஷா இப்படி பேசியுள்ளார். அமித்ஷாவுக்கு நான் சவால் விடுகிறேன். புதுச்சேரி அரசோ, சிபிஐ விசாரணையோ, அமலாக்கத் துறையோ, வருமான வரித்துறை விசாரணையோ எதற்கும் நான் தயார்.
ஊழல் குற்றச்சாட்டு ஒன்று நிரூபித்தாலும் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்காவிட்டால் அமித்ஷா பதவி விலக வேண்டும். பிரதமருக்கு அடுத்த நிலையிலுள்ள அமித்ஷா, மூன்றாம்தர அரசியல்வாதியல்ல. தவறான தகவல்களை காங்கிரஸ் மீது சராமரியாக கூறியது கண்டிக்கத்தக்கது. எந்த விசாரணைக்கும் தயார். சனீஸ்வர பகவான் கோயில் பக்கத்திலேயே மேடையில் பொய் குற்றச்சாட்டை அமித்ஷா சொல்லியுள்ளார். என்.ஆர். காங்கிரஸ், பாஜ 24 இடங்களை பெறுவோம் என்றும் கூறியுள்ளார். ஆனால் 4 இடங்கள்கூட வெல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
